வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (12/04/2018)

கடைசி தொடர்பு:11:12 (12/04/2018)

மு.க.ஸ்டாலின் சந்திப்பைத் தவிர்க்கவே தஞ்சாவூர் செல்கிறாரா கவர்னர்..?

காவிரி உரிமை மீட்புப் பயணத்தை முடித்துவிட்டு ஸ்டாலின் கவர்னரை சந்திக்க இருந்த தினத்தில் கவர்னர் தஞ்சாவூர் வருவதால் ஸ்டாலினை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் சந்திப்பைத் தவிர்க்கவே தஞ்சாவூர் செல்கிறாரா கவர்னர்..?

காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 13-ம் தேதி தமிழக கவர்னரைச் சந்திப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், அன்றைய தினம் கவர்னர் திருவையாறு அருகேயுள்ள கோயில் பிரமோற்சவ விழாவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினைச் சந்திப்பதைத் தவிர்க்கவே கவர்னர் தஞ்சாவூர் செல்வதாகச் சொல்லப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை, திருச்சி முக்கொம்பில் இருந்து கடந்த 7-ம் தேதி தொடங்கினார் ஸ்டாலின். பின்னர் அன்றைய தினம் கல்லணை அருகே பொதுகூட்டத்தில் உரையாற்றினார். 

இதைத் தொடர்ந்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயணம் செய்துவரும் ஸ்டாலின், கடலூரில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, தனது காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

காவிரி உரிமை மீட்பு  நடைப்பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கிவைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் பயணத்தை அரியலூரில் இருந்து தொடங்கினார்கள்.

ஸ்டாலின்

ஸ்டாலின் செல்லும் ஊர்களில் எல்லாம் ஏராளமான மக்கள் திரண்டு வந்து, "காவிரியில் தண்ணீர் வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. காவிரி கரைபுரண்டு வந்தால் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். அப்போதுதான் எங்கள் வாழ்வு செழிக்கும்; மகிழ்ச்சி பெருகும். ஆனால் பல ஆண்டுகளாக காவிரி வறண்டு கிடப்பதால், விவசாயிகளான நாங்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்து வருகிறோம்" எனக் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் காணப்படும் காவிரி ஆற்றில் ஸ்டாலின் இறங்கி நடக்கிறார். தண்ணீர் இல்லாததால் நடவு செய்யப்படாமல் கிடக்கும் வறண்ட வயல்களைப் பார்த்து மனம் வெம்புகிறார். போகிற ஊர்களில் எல்லாம் 'ஏப்ரல் 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமருக்கு, மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும், கறுப்பு உடை அணிந்தும் கடுமையான எதிர்ப்பைக் காட்டவேண்டும்' என பேசி வருகிறார்.

இந்த நிலையில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களோடு கடலூரில் நிறைவு செய்யும் ஸ்டாலின், ஏப்ரல் 13-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன், கவர்னர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்போது, மக்கள் தன்னிடம் தெரிவித்த துயரங்களையும், இன்னல்களையும் எடுத்துரைப்பதுடன், மனுவும் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக மிகப்பெரிய திட்டத்தை ஸ்டாலின் வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 'காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு நிரந்தரமான நீதி கிடைக்க வேண்டும். அப்போதுதான் டெல்டா மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் பாழாகாமல் பாதுகாக்கப்படும்' என்றும் கவர்னரிடம் ஸ்டாலின் தெரிவிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கல்யாணபுரம் சீனிவாசப் பெருமாள் கோவில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்குச் சென்ற கவர்னருக்கு தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நிகழ்ச்சியை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் நிறைவாக தன்னைச் சந்திக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கவே, திருவையாறு அருகே கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் பேசினோம். "காவிரிக்கான தமிழகத்தின் உரிமைக்காகவே கவர்னரை ஸ்டாலின் சந்திக்க உள்ளார். ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்டாலினும், கவர்னரும் சந்தித்தனர். ஏப்ரல் 13-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தளபதியைச் சந்திக்க கவர்னர் நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். நிச்சயமாக தளபதி, அனைத்துக் கட்சித் தலைவர்களோடு கவர்னரைச் சந்திப்பார்" என்கின்றனர்.

கவர்னரின் தஞ்சைப் பயணம் பற்றி காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ``13-ம் தேதி கவர்னர் தஞ்சாவூர் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கலந்துகொள்ளும் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் ஆய்வு செய்யபட்டுள்ளது. மாலை 4 மணியளவில் கோயில் விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். ஆனால், 'சென்னையில் இருந்து எப்போது கிளம்புகிறார்' என இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்