வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:12:00 (12/04/2018)

நகைக்கடனை மறுக்கும் வல்லம் ஐ.ஓ.பி வங்கி மேலாளர்! வேதனையில் விவசாயிகள்

'சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரிக்கு மனசு வரமாட்டேங்குது' என கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். விவசாயிகளுக்கு நகைக்கடன் கொடுப்பதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டிவருகிறது.  ஆனால், தஞ்சாவூர் வல்லம் ஐஒபி  கிளை மேலாளரோ, விவசாய நகைக்கடன் என்ற சொல்லைக் கேட்டாலே கொந்தளிப்பதாக, இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.   

வல்லம்,  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் ஐஓபி கிளை செயல்படுகிறது . இது, விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், விவசாயிகளின் வருகை இங்கு அதிகமாக இருக்கும். ஆனால், சமீபகாலமாக  தங்களைப் புறக்கணிப்பதாக  விவசாயிகள்  குற்றம் சாட்டுகிறார்கள். ’வல்லம், பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, குருவாடிப்பட்டினு  பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ''இங்கதான், விவசாய நகைக்கடன் வாங்குறது வழக்கம். ஆனா, சமீபகாலமாக இங்குள்ள மேனேஜர் வீரமணி, எங்ககிட்ட குதர்க்கமா கேள்வி மேல கேள்வி கேட்டு, கடன் தராம விரட்டி அடிக்கிறாரு. விவசாய நகைக் கடன் வாங்க, நிலத்தோட பட்டா, சிட்டா, விஏஒ ஆவணங்கள்தான் அடிப்படை ஆதாரம். இதையெல்லாம் நாங்க எடுத்துக்கிட்டு போனாலும்கூட, ‘நீங்க விவசாயிதான்னு நான் எப்படி நம்புறது’னு மேனேஜர் கேக்குறாரு. இதை, வேற எப்படித்தான் நிரூபிக்கிறதுனு தெரியலை. நாங்க விவசாயிதான்கிறது அவருக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் எங்களை அலட்சியப்படுத்துறாரு. சந்தேகமா இருந்தா, எங்க கிராமத்துக்கே வந்து விசாரிக்க வேண்டியதுதானே... ஒருத்தர் ரெண்டு பேர் மேல சந்தேகப்பட்டா பரவாயில்லை. பெரும்பாலான விவசாயிகளிடம் இப்படித்தான் நடந்துக்கிறாரு. அவரோட உண்மையான நோக்கம் எங்களுக்கு நல்லாவே தெரியும். விவசாய நகைக்கடன் கொடுக்குறதுல அவருக்கு விருப்பம் இல்லை. தமிழ்நாடு முழுக்க  உள்ள ஐஓபி கிளைகள்ல விவசாய நகைக்கடன் வழங்கப்படும்னு பெரிய ஃபிளெக்ஸ் வச்சி விளம்பரப்படுத்துறாங்க.  ஆனா, இங்க அந்த ஃபிளெக்ஸை எப்பயாவதுதான் பார்க்க முடியும்” என்று ஆதங்கப்படுகிறார்கள்.

ஆனால் மேலாளர் வீரமணியோ, ‘விவசாய நகைக்கடன் கொடுத்துக்கிட்டுதான் இருக்கோம். எங்கள் வங்கி எல்லைக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு கடன் கொடுத்துதான் வருகிறோம். குற்றம் சாட்டுபவர்கள் வங்கி எல்லைக்குள் வரவில்லை” என்றார்.