`மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது' - காவிரிக்காக உயிர் நீத்த பொம்மை வியாபாரியின் கடைசி வார்த்தை #WeWantCMB

காவிரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மனமுடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டை அடுத்த சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (25). 8 வது வரை பள்ளிப்படிப்பை முடித்தவர். திருவிழாக் காலங்களில் பொம்மை வியாபாரம் செய்து, கிடைக்கின்ற வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். அம்மா, அப்பா இறந்துபோக, பாட்டி ரத்தினம்மாளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே வியாபாரம் டல்லடிக்கவே வீட்டிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்னைகளைத் தொடர்ந்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்தவர், இன்று காலை 3.30 மணியளவில் அவருடைய டூ வீலரில் இருந்து பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றி தீக்குளித்திருக்கிறார். 

இதை, வீட்டின் அருகிலிருந்த ரத்தினம் என்பவர் பார்த்துச் சொல்ல, அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். 95 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த தர்மலிங்கம் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 9.45 மணியளவில் உயிரிழந்தார்.

காவிரி

உயிரிழந்த தர்மலிங்கம் எந்த அரசியல் கட்சியையும் அரசியல் அமைப்பையும் சேராதவர். அதிகம் யாருடனும் பேசமாட்டாராம். காவிரி பிரச்னை அவருடைய மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தவே தீக்குளித்திருக்கிறார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். 

உயிர் இறப்பதற்கு முன்னதாக தர்மலிங்கம் தன்னுடைய வீட்டு காம்பவுண்ட் சுவரில், 'மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர். எடப்பாடி பழனிசாமி அவர்களே நீங்க தமிழன் இல்லையா. தமிழ்நாட்டு மக்களிடம் துணிந்து சொல்லுங்க பார்க்கலாம். தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது' என தன்னுடைய ஆதங்கத்தை சாக்பீஸால் எழுதியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!