வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (12/04/2018)

கடைசி தொடர்பு:11:44 (12/04/2018)

எங்களிடமே லஞ்சம் கேட்பதா? - கொந்தளிக்கும் சென்னை போலீஸ்

போலீஸ் 

சென்னை மாநகர காவலில் பணியாற்றுபவர்களுக்கு விடுமுறை சரண்டருக்கான ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. 

 சென்னை மாநகரத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு விடுமுறை சரண்டருக்கான ஊதியம் வழங்கப்படும். சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் விடுமுறை சரண்டர் பிரிவில் (எஸ் பில்)  தகுதியான காவலர்கள் விண்ணப்பிப்பதுண்டு. அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து சரண்டர் செய்யப்பட்ட விடுமுறைக்கான ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு விண்ணப்பித்த பலருக்கு சரண்டர் ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

 இதுகுறித்து பேசிய காவலர்கள், "விடுமுறை நாள்களில் பணிக்கு வந்த வேலை நாள்களைச் சரண்டர் செய்தால் அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பிரிவு ஊழியர்கள் கண்டுக்கொள்வதில்லை. இதனால், சரண்டர் லீவு சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. காலதாமதம் குறித்து சம்பந்தப்பட்ட எஸ் பிரிவில் உள்ள ஊழியர்களிடம் விசாரித்தால், அன்பளிப்பு நேரிடையாகவே கேட்கப்படுகிறது. கமிஷனர் அலுவலகத்திலேயே காவலர்களிடம் அன்பளிப்புக் கேட்கப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. எனவே, காவல் உயரதிகாரிகள் தலையிட்டால் மட்டுமே லீவு சரண்டர் பணம் உடனடியாகக் கிடைக்கும்" என்றனர். 

 இந்தத் தகவல், சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.