தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில், பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மிகச் சிறப்பாக சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 26-ம் தேதி நடக்க இருக்கிறது.

தஞ்சாவூர் பெரிய கோயில்

தஞ்சைப் பெரியகோயில் உலகப் பிரசித்திபெற்றது. இங்கு, வருடம்தோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடக்கும். இந்த வருடம், சித்திரைத் திருவிழாவுக்காக பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில், ஶ்ரீ சந்திரசேகர் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பாடாகி வலம் வந்தார். பின்னர், மேள தாளங்கள் முழங்க,  ஓதுவார்கள் திருமறை மந்திரங்கள்  ஓத, இன்று காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதன் பிறகு, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இரண்டாம்  நாள் திருவிழா, 13-ம் தேதி மாலை சிம்ம வாகனத்திலும், 14-ம் தேதி மூஞ்சூறு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ம் தேதி காலை, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று மாலையே மேஷ வாகனத்தில் சுப்பிரமணியசாமி ஊர்வலம் நடக்கிறது.

தஞ்சாவூர் பெரிய கோயில்

இதைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு சுவாமிகள் பல்வேறு அலங்காரத்தில் புறப்படாகி ஊர்வலம் நடக்க இருக்கிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக  26-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை  நான்கு மணிக்கு, தியாகராஜர் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார்கள்.  சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். தேர் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து, மண்டபத்தை வந்தடையும்.

29-ம் தேதி மாலை கொடியிறக்கபட்டு, சித்திரைத் திருவிழா நிறைவுபெறும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!