வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (12/04/2018)

கடைசி தொடர்பு:12:30 (12/04/2018)

கறுப்புச் சட்டையுடன் கருணாநிதி! எம்.எல்.ஏ வீட்டு மாடியில் பறந்த ராட்சத கறுப்புப் பலூன்!

ராட்சத கறுப்பு பலூன்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு. தி.மு.க எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியின் வீட்டு மாடியில் கறுப்பு ராட்சத பலூன் கட்டி பறக்கவிடப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியினர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று போராட்டங்களில் ஈடுபட்டுவருவதோடு, தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வீடு, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பினர் கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன், பிரதமர் வருகைக்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது வீட்டு மாடியில் கறுப்பு ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளார். அந்தப் பலூனில் "தமிழ்நாட்டை வஞ்சிக்கும் Modi Go BACK" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த ராட்சத பலூனை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வாகை சந்திரசேகர், சேகர்பாபு மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பறக்கவிட்டு முழக்கமிட்டனர்.

கறுப்பு சட்டையுடன் கருணாநிதி

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி கறுப்புச் சட்டை அணிந்துள்ளார். மேலும், கழுத்தில் மஞ்சள் துண்டும் போட்டுள்ளார். இந்தப் படம், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.