உஷா மரணத்துக்கு காரணமான டிராஃபிக் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்!

டிராபிக் காவல் ஆய்வாளர் காமராஜ்

திருச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா- உஷா தம்பதியை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். இதில் வண்டியிலிருந்து கீழே விழுந்த உஷா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆய்வாளர் காமராஜ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "கடந்த மார்ச் 7-ம் தேதி திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி அருகே வாகன சோதனையின்போது ராஜா என்பவர் தனது மனைவியோடு இரு சக்கர வாகனத்தில் நிற்காமல் சென்றார். அப்போது ராஜாவின் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த வாகனத்தை நான் துரத்திச் சென்று விரட்டி மிதித்ததால்தான் விபத்து ஏற்பட்டு உஷா பலியானார் எனத் திருச்சி பாய்லர் பிளாண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர் இரு சக்கர வாகனத்தில் முன் பகுதியில் கிரைண்டர் வைத்து ஓட்டிச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது. எனவே, எனக்கும் விபத்துக்கும் தொடர்பில்லை. நான் 35 நாள்களாகச் சிறையில் உள்ளேன். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர், தொடர்ந்து 35 நாள்களாகச் சிறையில் உள்ளார். புகார்தாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!