நிறைவுபெறுகிறது ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்புப் பயணம்!

டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்திவரும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து புறப்பட்டு சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதுடன், பயணம் நிறைவு பெறுகிறது.  

காவிரி உரிமை மீட்புப் பயணம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு, அதற்கு உரிய அழுத்தம் தராத மாநில அரசு இவற்றைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்திவருகிறார், ஸ்டாலின்.  கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, திருச்சி முக்கொம்பில் தொடங்கிய பயணம், 5-ம் நாளான நேற்று நாகை மாவட்டத்தில் தொடர்ந்தது. வேளாங்கண்ணியில் தொடங்கிய ஸ்டாலினின் பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் தி.மு.க பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.  கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தும், அதன்பின் கார்களில் இருந்தபடியே கைகளை அசைத்தும் தொடர்ந்த பயணம், காரைக்காலைச் சென்றடைந்தது.  காரைக்கால் மாவட்ட எல்லையில் மாவட்டச் செயலாளர் நாஜிம் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  பின்னர், சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு, சிறிது நேரம் ஸ்டாலின் ஓய்வெடுத்தார். மீண்டும் மாலையில் புறப்பட்ட பயணத்தில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  பொறையாறு, திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல் ஆகிய இடங்களில் மட்டும் சிறிது நேரம் இறங்கி நடந்துசென்றார்.  கடலி என்ற ஊரில் பெரும் திரளாகக் கூடியிருந்த தொண்டர்களிடம் பேசுவதற்கு மைக் எடுத்தபோது, போதையில் இருந்த உடன்பிறப்பு ஒருவர், 'தலைவா பேசு, தலைவா பேசு' என்று போதையில் கத்தவே, கடுப்பான ஸ்டாலின் பேசாமல் வண்டியை எடுக்கச்சொல்லிவிட்டார்.  

Stalin Cauvery Retrieval 2

 விவசாயிகள் சந்திப்பின்போது, ''காவிரிப் பிரச்னையில் கௌரவம் பற்றி கவலைப்படாமல், பிரதமரைச் சந்திக்க தமிழக முதல்வருடன் அனைத்துக் கட்சியினரும் செல்ல முடிவெடுத்தோம். ஆனாலும், பிரதமரைச் சந்திக்க தமிழக அரசு நேரம் வாங்கவில்லை. பிரதமரைச் சந்திக்க நேரம் வாங்கமுடியாத கோமாளி அரசாக, முதுகெலும்பு இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக அ.தி.மு.க உண்ணாவிரதம் இருந்தது.  அந்தப் போராட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம்கூட போடவில்லை.  மாறாக, தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீது பழிசுமத்திப் பேசினார்கள்.  தமிழகத்திற்குச் செய்த துரோகத்தைக் கண்டித்து, பிரதமர் மோடி வரும் இன்றைய நாளில் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று அறிவித்தோம். என்றாலும், அச்சம் காரணமாகத் தரை மார்க்கத்தை ரத்து செய்து ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார் மோடி.  ஹெலிகாப்டரிலிருந்து பார்க்கும் வகையில் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்படும்.  இன்று, தமிழகம் முழுவதுமே வீடுகளில் கறுப்புக்கொடியும், தமிழர்களின் ஆடைகளில் கறுப்பு பேட்ச் அணிந்து துக்க நாளாகக் கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.

இன்று, கடலூரில் நிறைவுபெறும் பயணத்தை முடித்துக்கொண்டு, நாளை (13.04.2018) காலை ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கார்களில் பேரணியாக சென்னை ராஜ்பவனுக்குச் சென்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மனு அளிக்க உள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!