வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (12/04/2018)

கடைசி தொடர்பு:14:30 (12/04/2018)

குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்யும் மழையின் காரணமாகக் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலம் மெயின் அருவி

வெப்பச் சலனம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாகக் கொடுமுடியாறு அணைப்பகுதியில் 20 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. அத்துடன், மணிமுத்தாறு அணை, சேர்வலாறு அணை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 28 அடியாகக் குறைந்துவிட்டது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81 அடியாக உள்ளது. கோடைக்காலத்தில் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ எனப் பொதுமக்கள் அஞ்சினார்கள். இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் பரவலாகப் பெய்துவரும் மழையின் காரணமாகப் பொதுமக்களின் மனம் குளிர்ந்துள்ளது.

ஐந்தருவி

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியிலும் அதிக அளவுக்கு நீர் வரத்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர். ஐந்தருவில் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் விழுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த சில தினங்களாகக் குற்றால அருவிகளுக்கு பயணிகள் வருகை தரத் தொடங்கியிருக்கிறார்கள்.