`உயிர்த் தியாகம் செய்வது ஏற்புடையதல்ல' - ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

`கறுப்புக்கொடி காட்டுவது  ஜனநாயக உரிமை' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ராமகிருஷ்ணன்

 

பிரதமர் மோடியின் வருகைக்கு, தமிழகம் முழுவதுமே கறுப்புக்கொடி கட்டி பொது மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். கோவையிலும் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள், பொது மக்கள் சார்பில் கறுப்புக்கொடி கட்டி, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கோவை சித்தாப்புதூரில் கட்டிய கறுப்பு கொடிகளை போலீஸார் அகற்றினர். மேலும், அங்கு தி.மு.க-வின் வார்டு செயலாளர் சசிக்குமார் என்பவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அதேபோல, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டிய கறுப்புக்கொடிகளை போலீஸார் அகற்றச் சொல்லியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கறுப்புக்கொடி ஏற்றினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், "பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு எதிராக தமிழகமே போர்க்களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான  டெல்டா பிரதேசம் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், மத்திய அரசு தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவருகிறது. ஈரோட்டில் தர்மலிங்கம் போன்றோர்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உயிர்த் தியாகம் செய்வது ஏற்புடையதல்ல; அதைத் தவிர்க்க வேண்டும். பல்வேறு இடங்களில், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும்போது, அதை காவல்துறையினர் பறிமுதல்செய்வது கண்டனத்துக்குரியது. கறுப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமையாகும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!