வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (12/04/2018)

கடைசி தொடர்பு:13:42 (12/04/2018)

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்துமீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல்!

ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வேண்டும் என ஆட்சியரிடம் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் மனு அளிக்கச் சென்ற வாகனத்தின்மீது  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஸ்டெர்லைட் ஊழியர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 60 நாள்களாக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8 கிராம மக்கள் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அனுமதியைப் புதுப்பிக்க வலியுறுத்தி ஆலையின் மனுவை நிராகரித்தது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். இந்நிலையில் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் அனுமதி கிடைக்கும் வரை ஆலையின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படும்.

இந்நிலையில், ஆலையில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சுமார் 3,000 பேர் எங்களின் வாழ்வாதாரத்துக்காக ஆலை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், 3 பேருந்துகள், 1  வேனில் ஆலை ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலை இயங்க அனுமதி வேண்டும் என மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, மடத்தூர் விலக்கு அருகில் ஆலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் பேருந்துகளின்மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில், 2 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது. 5 வயது பெண் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 பேருந்து ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்பட்டது. பேருந்தின் முன்பு போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் செய்தியாளர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், போலீஸார் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். ஊழியர்களைப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். பின், ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காயம்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க