வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (12/04/2018)

கடைசி தொடர்பு:11:49 (19/04/2018)

நேரு, இந்திரா, மோடி... பிரதமர்களுக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டங்கள்!

கறுப்புக்கொடி போராட்டம்

முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா ஆகியோருக்கு தமிழகத்தில் கறுப்புக்கொடி காட்டப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் மக்கள் கறுப்புக்கொடி காட்டும் எதிர்ப்பை முதல்முறையாகப் பிரதமர் மோடி எதிர்கொண்டுள்ளார். 

இப்போது மட்டுமல்ல, 60 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமராக இருந்த நேருவுக்கு எதிராகத் தமிழகத்தில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.   1958-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, சென்னைக்கு வந்த நேருவுக்கு தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் போராட்டத்துக்குக் காரணம், அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, தமிழகத் தலைவர்களை முட்டாள்கள் எனக் குறிப்பிட்டு நேரு பேசியதுதான்! 

இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க அப்போது மத்திய அரசு முடிவெடுத்ததைக் கண்டித்து, போராட்டம் நடத்திய தலைவர்களைப் பற்றித்தான் நேரு அவ்வாறு குறிப்பிட்டார். அதைக் கண்டித்து தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்தன. ஜனவரி 3-ம் தேதியன்று மெரினா கடற்கரையில் நேருவைக் கண்டித்து தி.மு.க-வின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முயன்றனர். ஆனால், அதில் பங்கேற்கச் சென்ற தலைவர்களைப் போலீஸார் கைதுசெய்து முடக்கினர். தொடர்ச்சியாகக் கொந்தளிப்பு நிலவியபோதும், ஜனவரி 6-ம் தேதியன்று இந்திய அறிவியல் மாநாட்டைத் தொடங்கிவைக்க நேரு சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்பதைப்போல திரண்ட தி.மு.க-வினர், திட்டமிட்டபடி கறுப்புக்கொடியைக் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

சென்னையில் அன்று நடந்த போராட்டத்தில் மட்டும் 25,000 பேர் கலந்துகொண்டனர்; அதில் 60-க்கும் மேற்பட்ட முறை போலீஸார் கண்ணீர்ப் புகைகுண்டுத் தாக்குதல் நடத்தினர். 150 பேர் காயமடைந்தனர்; 16 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது போலீஸின் கணக்கு. அப்போராட்டம் தொடர்பாக 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேருவை அடுத்து, பிரதமரான இந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்து, காங்கிரஸை தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் சிறை, சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதன் பிறகு, நடந்த தேர்தலில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தநிலையில், 1977 அக்டோபர் 29-ம் தேதி இந்திரா மதுரைக்கு வந்தார். அவருக்கு எதிராகத் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மு.க-வினரால் இந்திரா தாக்கப்பட்டதாகவும் அப்போது காங்கிரஸில் இருந்த பழ.நெடுமாறன் உட்பட சிலர் அவருக்குப் பாதுகாப்பாக நின்று தாக்குதலிலிருந்து அவரைக் காப்பாற்றினர் என்றும் கூறப்படுகிறது. 

நேருவுக்கும் இந்திராவுக்கும் எதிரான கறுப்புக்கொடி போராட்டங்கள் தி.மு.க எனும் ஒரு கட்சியால் மட்டுமே நடத்தப்பட்டவை; சென்னை, மதுரை எனக் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடத்தப்பட்டன. ஆனால், இப்போது பிரதமர் மோடிக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. பா.ஜ.க, அ.தி.மு.க தவிர்த்த அனைத்து கட்சிகளும் காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாகக் கண்டனம் தெரிவித்தே, இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.

கறுப்புக்கொடி போராட்டம் விமானநிலையம்

சாலை வழியாக வந்தால் எப்படியாவது கறுப்புக்கொடி எதிர்ப்புக் காட்டப்படும் நிலைமை இருக்கிறது என உளவுத்துறை உறுதிப்படுத்தியதால், பிரதமர் மோடியின் சாலைவழிப் பயணம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, வான்வழியாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல் வரலாற்றில் இப்படியொரு போராட்டத்தை எதிர்கொண்டிருப்பாரா என்பது கேள்விதான்!