`` எடப்பாடி பழனிசாமி, ரஜினி, சீமான் மற்றும் டி.டி.வி.தினகரன் அவர்களே..!’’ - கொதிகொதிக்கும் வீரலட்சுமி

'போராடுகிறவர்கள் எல்லாம் டி.டி.வி.தினகரனோடு கூட்டு வைத்துள்ளனர். . இவர்களோடு இணைந்து போராடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. தமிழர்களின் நலனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லது செய்வார்' என்கிறார் வீரலட்சுமி. மேலும் பேசியபோது பல அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார். இனி அவர் சொல்லியது அப்படியே இங்கே...

`` எடப்பாடி பழனிசாமி, ரஜினி, சீமான் மற்றும் டி.டி.வி.தினகரன் அவர்களே..!’’ - கொதிகொதிக்கும் வீரலட்சுமி

வீரலட்சுமி

காவிரி விவகாரத்துக்காகத் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டம், போராட்டம், கைதுகள், வழக்குகள் என போராட்டக்குழுவினரை அடக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக அரசு. அதேநேரம், போராட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டவரான தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி அமைதியாக இருக்கிறார். 'போராடுகிறவர்கள் எல்லாம் டி.டி.வி.தினகரனோடு கூட்டு வைத்துள்ளனர். இவர்களோடு இணைந்து போராடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. தமிழர்களின் நலனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லது செய்வார்' என்கிறார் வீரலட்சுமி. மேலும் பேசியபோது பல அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டார். இனி அவர் சொல்லியது அப்படியே இங்கே...

`` காவிரிக்காக சிறு போராட்டத்தையும் நீங்கள் முன்னெடுக்கவில்லை... ஏன் இவ்வளவு அமைதி?’’ 

``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. காவிரி தொடர்பாக ஏற்கெனவே பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியபோது, முதன்முறையாக வாட்டாள் நாகராஜை எதிர்த்து சென்னையில் போராட்டம் நடத்தியது நாங்கள்தான். 'நாகராஜ் யார்' என்பதை தமிழ்நாட்டுக்குக் காட்டியதே நான்தான். அது ஊடகங்களுக்கும் தெரியும். அவரது உருவபொம்மையை எரித்தவள் நான். காவிரிக்காக அமைதி காப்பதற்கு சில அரசியல் காரணங்கள் உள்ளன." 

``அதென்ன அரசியல் காரணம்?’’ 

" அதாவது வந்துண்ணே...உணர்வுபூர்வமாக இங்கு யாரும் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. ஜெயலலிதா இருந்த காலத்திலும் சரி...கருணாநிதி அய்யா முதல்வராக இருந்தபோதும் சரி...கோரிக்கையை நிறைவேற்றத்தான் நாங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம். அந்தப் போராட்டம் ஒருகட்டத்தில் புரட்சிகரமாக மாறும். நாங்கள் கைதாவோம். இப்போது நடக்கும் காவிரி பிரச்னை என்பது, அரசுக்குக் கோரிக்கை வைத்து நடக்கும் போராட்டமாகத் தெரியவில்லை. ஏதோ கிளர்ச்சி ஏற்படுத்தி, அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தில் நடந்து வருகிறது. அவர்கள் நடத்தும் போராட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு". 

``அப்படியானால், 'அரசைக் கவிழ்ப்பதற்காகத்தான் சீமானும் வேல்முருகனும் போராடுகிறார்கள்' என சொல்ல வருகிறீர்களா?'' 

சீமான்" தமிழ்த்தேசிய அரசியலில் இருக்கும் நானாக இருக்கட்டும். அண்ணன் சீமானாக இருக்கட்டும். ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏழு பேர் விடுதலைக்காக காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நான் கைதானேன். அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அங்கிருந்து சோனியா காந்தியே, ஜி.கே.வாசனிடம் பேசி என்னுடைய இயக்கத்தைத் தடைச் செய்யச் சொன்னார். என்னை என்.எஸ்.ஏவில் உள்ளே போடச் சொன்னார்கள். 'எனக்குப் புலிகளிடம் இருந்து பணம் வருகிறது' எனக் கூறி, ஆளுநரிடம் புகார் கொடுத்தார் அக்கா விஜயதரணி. 15 நாள் சிறையில் இருந்தேன். அப்போது இந்த அண்ணன்கள் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை. என்னை அவர்களுக்கு அப்போது தெரியுமா எனத் தெரியாது. ஆனால், உலகம் முழுக்க வீரலட்சுமி யார் எனத் தெரியும். லஞ்சம், ஊழலை நாங்கள் எதிர்க்கிறோம். எளிய முறையில் மக்களுக்குக் கடமையாற்ற வேண்டும் என நினைக்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருடைய குடும்பத்தினரிடம் இவர்கள் அரசியல்ரீதியாக உறவு வைத்துள்ளனர். இவர்களோடு சேர்ந்து போராடுவதில் எனக்கும் விருப்பமில்லை. எங்கள் அமைப்பினருக்கும் விருப்பமில்லை". 

``டி.டி.வியோடு இவர்கள் கூட்டு வைத்திருக்கிறார்கள் என எப்படிச் சொல்கிறீர்கள்?'' 

`` ஆமாம். இப்போது போராடுகிறவர்கள் எல்லாம் டி.டி.வி.தினகரனோடு கூட்டு வைத்துள்ளனர். டி.டி.வியோடு கூட்டு வைப்பதைவிட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியல் செய்ய வேண்டும் விளம்பரம் வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடாது. இளைஞர்களை ட்விஸ்டிங் செய்து, அவர்களது வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதெல்லாம் விடுங்கள்... நான் ஒன்று கேட்கிறேன். காவிரிக்காக யார் முதலில் குரல் கொடுக்க வேண்டும்.. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது. இன்றைக்கு ஸ்டாலினோடு காங்கிரஸ் கூட்டு வைத்திருக்கிறது. தமிழ்த்தேசிய ஆட்களும் காங்கிரஸை அருகில் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மதிக்காமல் இருப்பது காங்கிரஸ்தான். மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்து, எங்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் இவர்கள் கூறியிருக்க வேண்டும்". 

எடப்பாடி பழனிசாமி``எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? ''

`` உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார் அண்ணன் எடப்பாடி பழனிசாமி. அதை நாங்கள் வரவேற்கிறோம். இருந்தாலும் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு எதையாவது உடனே செய்தார் என்றால் நன்றாக இருக்கும்!" 

`` `வன்முறையைக் கிள்ளி எறியாவிட்டால் நாட்டுக்கே பேராபத்து' என ரஜினி கூறியதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

" காவல்துறையில் என்னைவிட தமிழ் மீதும் தமிழ் மண் மீதும் அதிகப் பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சீருடையை அணிந்திருக்கிறார்கள். சீருடை அணியாவிட்டால், அவர்களைவிட உணர்வாளர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் அடித்ததாகவே இருக்கட்டும். அதைத் தடுக்கத்தான் பார்த்திருக்க வேண்டும். அவர்களோடு பாக்ஸிங் செய்திருக்கக் கூடாது. ஜனநாயக நாட்டில் வன்முறையைத் தூண்டும் வகையில்தானே அவர்களுடைய செயல்பாடு இருந்தது. இப்போது ரஜினி ஏன் பேசுகிறார்? அவருடைய படத்தைப் பார்த்துதான் தம்பிகள் குட்டிச் சுவராகப் போய்விட்டார்கள். ஈழப் படுகொலையைப் பற்றியோ, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளைப் பற்றியோ அவர் என்றுமே பேசியதில்லை. கர்நாடகாவில் தமிழர்களை அடித்தபோதும் அவர் பேசவில்லை. இப்போது பேசுகிறார் என்றால், அவருக்கும் ஓர் அரசியல் காரணம் உள்ளது!’’ 

``பிரதமர் மோடியின் வருகைக்குக் கறுப்புக் கொடி காட்டியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

``அதனால் என்ன பிரயோஜனம்? அவர் எந்தக் கொடியையாவது பார்த்தாரா...!? அவர்தான் ஃபிளைட்டில் பறந்து போய்விட்டாரே...!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!