சென்னை அணுமின் நிலையத்தில் ஊழியர் `மர்ம' மரணம்! 

ஊழியர் மர்ம மரணம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார் தற்காலிக ஊழியர் ஒருவர்.

' மின்வேலை தெரியாத ஒருவரை, அந்த வேலையில் கட்டாயப்படுத்தியதால்தான் டில்லிபாபு இறந்தார். அதை வெளிப்படையாகச் சொல்வதற்கு நிர்வாகம் மறுக்கிறது' ' எனக் கொதிக்கின்றனர் அவரது குடும்பத்தினர். 

காஞ்சிபுரம் மாவட்டம், சதுரங்கப்பட்டினத்தை ஒட்டியுள்ள தக்காமேடு கிராமத்தைச் சேர்ந்தவர், டில்லிபாபு (36). சென்னை அணுமின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் இளநீர் வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள். கடந்த சில நாள்களாக, அணுமின் நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக வேலைபார்த்துவந்தார். இந்நிலையில், நேற்று மதியம் அணுமின் நிலையத்துக்குள் இருக்கும் புளுடோனியம் பிரி புராசஸிங் (பிஆர்பி) பிளான்ட்டில் உள்ள தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம்செய்ய மூன்று ஒப்பந்தப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் டில்லிபாபுவும் ஒருவர். தண்ணீர்த் தொட்டிக்குள் மின்சாரம் பாய்ந்ததன் விளைவாக, தண்ணீரில் இருந்தவர்களுக்கு ஷாக் ஏற்பட்டுள்ளது.

தொட்டிக்குள் இருந்த இரும்பு  ஏணியைப் பிடித்ததால், டில்லி பாபு மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், தக்காமேடு கிராமத்தினர். டில்லி பாபுவின் மனைவி வளர்மதியிடம் பேசினோம். " அவருடைய வலது மார்பில் ஒரு ரூபாய் காசு அளவுக்குக் காயம் இருக்கு. கழுத்துப்பகுதி முழுக்க கறுப்பாக மாறியிருக்கு. உள்ளே என்ன நடந்ததுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க. இளநீரை வித்துட்டு நல்லா இருந்தோம். வேலை தர்றோம்னு கூட்டிட்டுப் போனாங்க. பொணமாத்தான் திருப்பி அனுப்பியிருக்காங்க. எலெக்ட்ரிக் வேலையைச் செய்யச் சொன்னதால்தான், அவர் இறந்தார்னு சொல்றாங்க. அவருக்கு எலெக்ட்ரிக் வேலை எதுவும் தெரியாது. இப்ப, ரெண்டு குழந்தைகங்கள வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே..." எனக் கதறியழுதார்.

' இறப்பில் எந்தவித மர்மமும் இல்லையென்றால், இறப்புக்கான காரணத்தை வெளியிடுவதற்கு அணுசக்தி வளாக மருத்துவமனையும் நிர்வாகமும் தயங்குவது ஏன்? இறப்புக்கான காரணத்தை மூடிமறைக்கவே நிர்வாகம் விரும்புகிறது' எனக் கொதிக்கிறார் சூழலியல் மருத்துவர் கல்பாக்கம் புகழேந்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!