‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம்

மசினகுடி வன சோனை சாவடி அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வழிமறிக்கும் ஜீப் ஓட்டுனர்கள், சட்டவிரோதமாக வனப் பகுதிக்குள் ‘ஜப் சபாரி’ அழைத்து செல்கின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகம்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்ல வனத்துறை சார்பில் வாகன சவாரி, யானை சவாரி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. மஸ்தா வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் ஒரு பயணிக்கு ரூ.340, ஒரு குடும்பத்தின் ஜீப் சவாரிக்கு ரூ.4,200. யானை சவாரி 4 நபருக்கு ரூ.1120. மேலும், யானைகள் முகாமுக்குச் செல்ல எனக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மசினகுடி வன சோதனைச் சாவடி அருகே வழிமறிக்கும் தனியார் ஜீப் ஓட்டுநர்கள், ‘ஓப்பன் ஜீப் சவாரி’ ஒரு நபருக்கு 600 ரூபாய் கொடுத்து காட்டெருமை, யானை, புலி மற்றும் சிறுத்தை ஆகியவற்றைக் காணலாம் எனச் சுற்றுலாப் பயணிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இதே போல, பொக்காபுரம் பகுதியிலும் ஜீப்களை நிறுத்திக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை வழிமறித்து வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

‘ஓப்பன் ஜீப் சவாரிக்கு’ சுற்றுலாப் பயணிகளை அழைக்க ரோட்டின் நடுவே கையசைத்தபடி காக்கிச் சட்டை அணிந்தபடி நின்று கொண்டிருந்த ஒரு ஜீப் ஓட்டுநரிடம் பேசியபோது, “சுற்றுலாப் பயணிகளை மாயார் கிராமம் பகுதிக்கு தார் ரோடு வழியாகத்தான் அழைத்துச் செல்வோம். பகல் நேரத்தில் மண் சாலையில் வாகனங்களை இயக்க வனத்துறை அனுமதிப்பதில்லை. மாயார் ஆற்றுக்கு, வனப்பகுதிக்குள் இருந்து தண்ணீர் குடிக்க சாதாரணமாக விலங்குகள் வந்து செல்லும் அவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டுவோம்” என்றார். அவரது பேச்சில் இது சட்டவிரோதமான பயணம் என்பது போன்ற உணர்வே இல்லை. தனியார் ஜீப் ஓட்டுநர்கள் சுற்றுலாப் பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்வது சட்ட விரோதமானது என்பதை அவர்கள் உணரவில்லையா அல்லது தெரிந்தே சட்ட விரோத செயலில் ஈடுபடுகிறார்களா என்பது கேள்வியாகவே உள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இதுபோன்ற ஜீப் சவாரி முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த ஜீப் ஓட்டுநர்களுக்கு மசினகுடி டவுனில் இருந்து தெப்பக்காடுவரை மட்டுமே பொதுமக்களை ஏற்றிச் செல்ல அனுமதியுள்ளது. அதேபோல மாயார், பொக்காபுரம் கிராமங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஜீப் சவாரி அழைத்து செல்ல எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகளிடம் பொய் சொல்லி, மாயார் அணைக்கு அழைத்துச் சென்று அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்” என்றார்.

சுற்றுலாப் பயணிகளை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் ஜீப் ஓட்டுநர்கள்மீது வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்பவர்கள்மீது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா, கார்குடி மசினகுடி, தெப்பக்காடு கோட்டங்களைச் சேர்ந்த வன அலுவலர்கள் சட்ட விரோதமான ஜீப் சவாரி அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்தும், பல லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோத ஜீப் சவாரி அழைத்துச் செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கு முற்பட்டபோது, சில ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து வனப்பகுதிக்கு தீ வைத்துவிட்டனர். அதை அணைக்க பல நாள்கள் போராட வேண்டியிருந்தது” என்றார்.

இது போன்ற சட்ட விரோதமான ஜீப் சவாரிகளைத் தடுத்து நிறுத்த வனத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாப்பற்ற வனச் சுற்றுலாவையும் வன விலங்குகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!