Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#GoBackModi உலக டிரெண்ட்.... என்ன சொல்கிறார்கள் தமிழக பி.ஜே.பியினர்!?

#Gobackmodi ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஒட்டுமொத்தப் பி.ஜே.பி-யினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது! 

மோடியின் தமிழக வருகைக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திவருவதைக் கண்டு அதிர்ந்து நிற்கிறது பி.ஜே.பி! காவிரி விவகாரம் தொடர்ச்சியாக அரசியலாக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே எதிர்ப்பு மனநிலையை உருவாக்கிவருகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் `காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க மத்திய பி.ஜே.பி அரசுக்கு 6 வார காலம் அவகாசம் கொடுத்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பையடுத்து, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் `நல்லதொரு தீர்வு கிடைத்துவிட்டது... இனி நிச்சயம் தமிழகத்துக்குள் காவிரி நீர் பாய்ந்தோடிவரும்' என்ற முழு நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த 6 வார காலக் கெடுவின் இறுதி நாளன்று, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்த மத்திய பி.ஜே.பி அரசின் செயல்பாடு தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் வெளிப்பாடாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைத் தமிழகத்தில் நடத்தக் கூடாது எனக்கூறி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில், சென்னை, மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க இன்று தமிழகம் வருகை தந்தார் பிரதமர் மோடி. சொட்டுத் தண்ணீரின்றி வாடிக்கிடக்கும் தமிழக மக்களுக்கு மோடியின் இந்த வருகை வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மோடியின் வருகையை எதிர்த்து தமிழகம் முழுக்க வீடுகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

மோடி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் மோடியின் வருகைக்கு எதிராக அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கறுப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியே திரும்பிப் போ' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திவந்த அவர்கள், மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். 

மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுக்கக் கிளம்பியிருக்கும் இந்த எதிர்ப்பு மனநிலை, அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ``உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தப் பெருமைமிகு நாட்டின் பிரதமராக இருப்பவர் மோடி. ஜனநாயகத்தின் அடிப்படையே அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான். ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில், தனது சொந்தக் கட்சி நலன் சார்ந்து செயல்படும் பிரதமர், தமிழக மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவருகிறார். இதற்குப் பதிலடியாக தமிழக மக்களும் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பைப் பலமாகப் பதிவுசெய்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான் இணையதளங்களில், மோடி எதிர்ப்பு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. ஆக, இந்த எதிர்ப்பானது, உலக அரங்கில் மோடியின் பெயரைக் களங்கப்படுத்துவதாகவே அமையும்!'' என்று அலாரம் அடிக்கின்றனர்.

அரசியல் விமர்சகர்களின் இந்தக் கருத்து குறித்து, தமிழகப் பி.ஜே.பியினரிடம் கருத்துக் கேட்டோம்...

பி.ஜே.பியினர்

எஸ்.வி.சேகர் (பி.ஜே.பி ஆதரவாளர்):
``உள்ளூர் அரசியலில், அ.தி.மு.க-வைக் கவிழ்க்க முடியாத தி.மு.க, மனநோய் மருத்துவர்களைப் பார்க்கவேண்டிய சீமான் மற்றும் சினிமாவில்கூட காட்சிகளாக வைக்கமுடியாத வசனங்களைப் பேசிவரும் பாரதிராஜா தலைமையிலான கூட்டம்தான் கறுப்புக் கொடி காட்டுகிறார்கள். மோடி என்பவர் குளோபல் லீடர். இவர்கள் எல்லாம் லோக்கல் க்ரூப். இந்தியா மேப்பை வாங்கி கிழிச்சுப் போட்டுட்டு, இந்தியாவையே துண்டாக்கிவிட்டேன் என்று சொல்வது எப்படி மனக்கோளாறோ... அதுபோல்தான் இந்த லோக்கல் குரூப் மோடியின் புகழைக் கெடுப்பதென்பது!''

வானதி ஶ்ரீனிவாசன் (மாநில துணைத் தலைவர்) :
``தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, காவிரி விவகாரத்தில் எந்தவித முயற்சியும் எடுக்காத இந்தக் கட்சிகள் காட்டிவரும் எதிர்ப்புகளால், பிரதமரின் பெயருக்கு உலக அரங்கில் ஒரு துளி அளவு கூட களங்கம் ஏற்படாது''

ஹெச்.ராஜா, (பி.ஜே.பி தேசியச் செயலாளர்):
``தமிழகம் முழுவதும் நான் காரில் போயிண்டிருக்கேன்.... எந்த எதிர்ப்பையும் காணவில்லையே....? கடந்த காலங்களில் பிரதமர்களாக இருந்த இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் தமிழகம் வந்தபோது அவர்களை அவமானப்படுத்திய, கொலை செய்த கீழ்த்தரமானவர்கள், வன்முறையாளர்கள் இப்போது செய்துவரும் சில்லறைத்தனமான செயல்பாடுகள் பிரதமர் மோடியின் மாண்பை எந்தவிதத்திலும் பாதிக்காது!''

கரு நாகராஜன் (மாநிலச் செயலாளர்): ``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பி.ஜே.பி எதிர்க்கவில்லை என்பதை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். காவிரியைக் குழிதோண்டி புதைத்துவிட்ட தி.மு.க-வினரும் காங்கிரஸாரும் மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டுவதே கேலிக்குரியது! எனவே, இதனால் மோடியின் புகழுக்கு எந்தக் களங்கமும் வந்துசேராது!''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement