வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (12/04/2018)

கடைசி தொடர்பு:15:47 (12/04/2018)

போலீஸை திக்குமுக்காட வைத்த போராட்டக்காரர்கள் 

 போராட்டம்

பிரதமர் நரேந்திரமோடிக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், சென்னை கிண்டி ரவுண்டானா என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை ரகசியமாக மாற்றிய போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒருபகுதியினர் திரிசூலத்தில் குவிந்ததால் போலீஸார் திணறினர்.   

காவிரி உரிமை மீட்புக் குழுவும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையும் இணைந்து சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டது. இதற்காகக் கிண்டி ரவுண்டானாவுக்கு காலை 9 மணிக்குள் வரும்படி போராட்டக்குழு அழைப்பு விடுத்தது. இதனால் கிண்டி ரவுண்டனா பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், யாருக்கும் தெரிவிக்காமல் போராட்டக்குழு தலைவர் மணியரசன் தலைமையில் தமிமுன் அன்சாரியும் தனியரசு எம்.எல்.ஏ மற்றும் தொண்டனர்கள் திரிசூலம் ரயில் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் திரண்டனர். காலை 8.45 மணியளவில் அனைவரும் அங்கு திரளத்தொடங்கினர். பிரதமர் நரேந்திரமோடி வரும் விமானம் காலை 9.40 மணிக்கு தரையிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலை 9.30 மணிக்கு விமான நிலையத்தை முற்றுகையிடத் திட்டமிடப்பட்டது.

இந்தத் தகவல் கிடைத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது, சீமானும் பாரதிராஜாவும் வந்த பிறகு, எங்களைக் கைதுசெய்யுமாறு  போலீஸாரிடம் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால், போலீஸ் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின்பேரில் கைது படலம் தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் தரையில் படுத்தனர். இந்தச் சமயத்தில் போலீஸாரின் தடுப்புகளை மீறி தமிமுன் அன்சாரி தலைமையில் ஒரு குழுவினர் விமான நிலையத்தை நோக்கி ஓடத் தொடங்கினர். அப்போது இன்னொரு போலீஸ் டீம் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது. இந்தத் திடீர் போராட்டத்தால் போலீஸார் திணறினர்.