குரங்கணி தீ விவகாரம்! - பீட்டர் வான்கெய்ட்க்கு முன்ஜாமீன்

பீட்டர் வான்கெய்ட்

குரங்கணி மலையேற்றப் பயிற்சிக்குத் தலைமை வகித்ததாகக் கூறி போலீஸார் தொடர்ந்த வழக்கில் சென்னை ட்ரெக்கிங் கிளப் நிர்வாகி பீட்டர் வான்கெய்ட்க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வசித்து வரும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான்கெய்ட் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னை ட்ரெக்கிங் கிளப்பை கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறோம். இந்த அமைப்புக்கு யாரும் தலைமை வகிக்கவில்லை, யாரிடமும் நன்கொடை வசூலித்ததில்லை. இந்த அமைப்பில் உள்ள சிலர் முறையான அனுமதி பெற்றே 27 பேருடன் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். ஆனால், குரங்கணியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பயிற்சியை ஒருங்கிணைத்த 4 பேர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். 27 பேரையும் காட்டுக்குள் அனுமதிக்க வனத்துறையினர் கட்டணம் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீது இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வரிடம்தான் இருந்துள்ளது. அவர்கள் இறந்த காரணத்தால், 27 பேரும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினரும் போலீஸாரும் கூறி வருகின்றனர்.

மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இந்நிலையில் மலையேற்றப் பயிற்சிக்குத் தலைமை வகித்ததாகக் கூறி குரங்கணி போலீஸார் என்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் தவறானது. எனவே, இந்த வழக்கிலிருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பீட்டர் வான் கெய்ட்க்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!