வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (12/04/2018)

கடைசி தொடர்பு:15:39 (18/04/2018)

"எதிர்ப்பு ட்ரெண்டிங்கிலும் மோடிதான் முன்னிலை!" ஹெச். ராஜா

நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் முடக்கிய எதிர்க்கட்சிகளின் ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. காங்கிரஸ், தெலுங்குதேசம், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து, வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தொடரில் எந்தவொரு முக்கிய விவாதங்களும் நடைபெறவில்லை. 

பிரகாஷ் ஜவடேகர்

எதிர்க்கட்சிகளின் இந்தச் செயலைக் கண்டிக்கும் வகையில், பி.ஜே.பி. எம்.பி -க்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. பிரதமர் மோடியும் உண்ணாவிரதம் இருப்பார் என்றும், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, கர்நாடக மாநிலம் தார்வார்டில் உண்ணாவிரதம் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

என்றாலும் பிரதமர் மோடியின் அலுவல்கள், உண்ணாவிரதத்தால் பாதிக்காத வகையில் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் போராட்டம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன் சென்னைச் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், போலீஸார் தடியடி நடத்தினர். சென்னையில் நடைபெறவிருந்த இதர ஐ.பி.எல். போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டுள்ளன.

இத்தகையச் சூழ்நிலையில் பாதுகாப்புத்துறை சார்பில், திருவிடந்தையில் நடைபெறும் `டிபெக்எஸ்போ-18' கண்காட்சியில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்துக்கு வெளியேயும், சென்னையில் பல்வேறு இடங்களிலும் மோடிக்கு எதிராகப் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முழக்கங்களை எழுப்பினர். தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கறுப்பு உடையணிந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வீடுகளில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. 

இந்நிலையில், `லோக் தந்த்ர பச்சாவ் உபவாஸ் & தர்ணா' என்ற பெயரில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் பி.ஜே.பி. எம்.பி-க்கள் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணாவிரதமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பி.ஜே.பி எம்.பி.-க்கள் பங்கேற்றனர். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மோடி

``2014-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாதவர்கள், நாட்டை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்வதை விரும்பவில்லை. ஜனநாயகத்தைப் படுகொலை செய்தவர்களின் முகத்திரையை நாட்டு மக்கள் முன் கொண்டுவருவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறோம். நான் உண்ணாவிரதம் இருந்தாலும், என் பணிகளைத் தொடர்வேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 

இதற்கிடையே அறிவித்தபடி பி.ஜே.பி. எம்.பி.-க்களுடன் இணைந்து மோடியின் உண்ணாவிரதம் பற்றி கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவிடம் பேசியபோது, அவர் நேரடியாகப் பதில் தெரிவிக்கவில்லை. மேலும் அவர், ``பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தவிர, தமிழக ஊடகங்கள் வேறு எதையும் செய்வதற்குத் தயாராக இல்லையா? தமிழ்நாடு மீடியா ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக மாறிக்கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தச்சென்றால், பெண் குளியலறையைப் பார்த்தார் என்று செய்தி வெளியிடுகின்றன. இப்போது மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கையில் எடுத்துள்ளன. காவிரிப் பிரச்னை இந்தளவுக்குப் போனதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரின் குடும்பமும்தான் காரணம். அதை ஊடகங்கள் ஏன் வெளிப்படுத்தத் தயங்குகின்றன. 1967-ல் காவிரியில் தண்ணீர் ஓடியது. இன்னைக்குத் தண்ணீர் இல்லாத காவிரியில் ஸ்டாலின் நடைபயணம் சென்று, அங்கு பொதுக்கூட்டம் நடத்துகிறார். அதையெல்லாம் எழுதாமல், பிரதமரின் பயணத்திட்டம் என்றெல்லாம் கேட்கிறீர்கள். 50 வருஷமா காவிரியில் தண்ணீர் ஓடியது. இன்னைக்குத் தண்ணீர் இல்லாத இடத்தில் பொதுக்கூட்டம் போடும் ஸ்டாலினின் உண்மையான நிலையை மக்களிடம் எடுத்துக் கூறாமல், பிரதமருக்கு எதிர்ப்பு என ஊடகங்கள் செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை. கர்நாடகத்தில் அணை கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் ஒப்புதல் அளித்தாரா இல்லையா? அங்கு அணை கட்டியதால்தான், இப்போது தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏன், மோடிக்கு எதிரான, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்? காவிரிப் பிரச்னையில் 50 வருஷமா தமிழ்நாட்டுக்கு, கருணாநிதி குடும்பம் செய்யாததை, 50 நாள்களில் தீர்வுகாண முடியும் என்று ஊடகங்கள் கருதுகின்றனவா?

ஹெச். ராஜாகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் சார்பில் உறுப்பினரை நியமித்து விட்டார்களா? எனவே, பிரதமர் மோடியை வேண்டுமென்றே இலக்குவைத்து, அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது இந்தியாவை உடைப்பதற்கான முயற்சி. `ஆன்டி மோடி என்பது, ஆன்டி இந்தியா'-வாகத்தான் அர்த்தமாகும். தமிழ்நாட்டை கருணாநிதி குடும்பம் பாலைவனமாக்கியுள்ளது என்பதை ஊடகங்கள் எழுதாவிட்டால், அவர்கள் தமிழ் உணர்வாளர்களே இல்லை என்பது என் கருத்து. ஸ்டாலினின் நாடகத்தை ஆதரித்து எழுதக்கூடிய அனைவரும் பொய்யர்கள். தமிழ்நாட்டில் ஒரு மிகப் பெரிய திட்டம் வருகிறது. பாதுகாப்புத் துறை சார்பில் கண்காட்சி நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள பிரதமர் வருகிறார். அவரைக் கைகூப்பி வரவேற்க வேண்டாமா? மாறாக பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டுவது எந்தவகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார். 

#GobackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளதே? என்று ஹெச். ராஜாவிடம் கேட்டதற்கு, ``தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேச விரோதிகள் மொத்தமே 10 பேர், அவர்களின் பின்னால் இருப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. அவர்கள் 780 பேர் என்பது நிரூபணமாகி விட்டது. அவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மக்கள் எப்போதும் மோடி பக்கம்தான் உள்ளனர்" என்று பதிலளித்தார். 

உண்ணாவிரதமோ, கறுப்புக் கொடியோ, ராணுவக் கண்காட்சியோ, ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்போ... காவிரிப் பிரச்னையில் மத்திய அரசின் மீது தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்