வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (12/04/2018)

கடைசி தொடர்பு:16:10 (12/04/2018)

`பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி மீது பாயும் கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி

 அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தெரிவித்தார். 

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் நடந்துவரும் களேபரங்களால் தொண்டர்கள் மதில்மேல் பூனையாக இருந்துவருகின்றனர். கோஷ்டி பூசலால் அ.தி.மு.க-வினர் திணறிவருகின்றனர். நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. இதன் பிறகு உற்சாகத்துடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தொடர்ந்து தினகரன் நெருக்கடி கொடுத்துவருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப் பெற்றது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்தநிலையில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அ.தி.மு.க வாக்களிக்கும் என்று கே.சி.பழனிசாமி பகிரங்கமாகத் தெரிவித்தார். இது அ.தி.மு.க-வில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், கே.சி.பழனிசாமியைக் கட்சியிலிருந்து நீக்கினர். 'தன்னை நீக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிகாரம் இல்லை' என்று கொந்தளித்தார் கே.சி.பழனிசாமி. அதோடு ஓ.பிஎஸ், ஈ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராகப் போர்கொடியும் தூக்கியுள்ளார். முதல்கட்டமாகத் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஆர்.டி.ஐ மூலம் தகவல்களைப் பெற்று அதைப் பகிரங்கமாக அறிவித்தார். அடுத்து அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். 

இதுகுறித்து கே.சி.பழனிசாமியிடம் பேசினோம், 

 "எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க-வை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு கட்சியை அழித்துக் கே.சி.பழனிசாமிகொண்டிருக்கிறார்கள். அதாவது, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த அ.தி.மு.க சட்டவிதிகளைத் தன்னிச்சையாக ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாற்றியுள்ளனர். கட்சியில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளைக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த இரண்டு பதவிகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அப்படியென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னைக் கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை. அவர்கள் என்னை நீக்கியது செல்லாது. தொடர்ந்து, அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி வேண்டும், அதற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளேன். ஏற்கெனவே வி.கே.சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் என்னையும் இணைத்துக் கொள்ள மனுத்தாக்கல் செய்துள்ளேன். அந்த வழக்கில் விசாரணையின்போது என் தரப்பு விவாதங்களை முன்வைப்பேன்" என்றார்.