`தமிழர்களை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ!’ - தி.மு.க-வினரின் புறாவிடு தூது

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க-வினர் புறா தூதுவிட்டனர்.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க-வினர் புறா தூதுவிட்டனர்.

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஒருபக்கம், எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மறுபக்கம், #GOBACKMODI என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேபோல, சென்னை ஐ.ஐ.டி சென்ற மோடிக்கு, அங்குள்ள மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவையிலும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் என மாவட்டம் முழுவதுமே தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டைமேடு பகுதியில் தி.மு.க இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கறுப்புத் துணி விரித்தும் கறுப்புக் கொடிகளைக் கட்டியும் கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது புறாக்களின் கால்களில், தமிழர்களை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என்று எழுதி, அவற்றைப் பறக்கவிட்டனர். புறாக்கள் மூலம் தூதுவிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக இந்த ஏற்பாடை செய்ததாகத் தி.மு,க-வினர் தெரிவித்தனர். இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க-வினருக்குள் சண்டை ஏற்பட்டால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.   

  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!