`ராகிங் செய்வோர்மீது கடும் நடவடிக்கை!’ - ஆட்சியர் அறிவுறுத்தல்

கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கல்லூரி நிர்வாகங்களுக்கு கரூர் ஆட்சியர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.    

 ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

கரூர் மாவட்டத்திலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பகடி வதை (Ragging) செய்வதை தடுத்தல் தொடர்பாகக் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் கல்வி நிறுவன முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "கல்லூரிகளில் பகடி வதை செய்வதால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படும். அனைத்துக் கல்லூரிகளிலும் பகடி வதையைத் தடுக்கும் பொருட்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இக்குழுக்கள் பகடி வதை தொடர்பான புகார்களை ஆய்வு செய்து உண்மை தன்மையை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். பகடி வதையின் தீமைகள் குறித்து கல்லூரிகளில் புதிதாகச் சேர்ந்துள்ள மற்றும் ஏற்கெனவே பயின்று வரும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு அறிவிப்புப் பலகையில் அவர்களது பெயரை வெளியிட வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் பகடி வதையைத் தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் பிரதான பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்திடவும் புதிதாகச் சேரும் மாணவர்களுக்குத் தனியே இருப்பிட வசதிகள் செய்து கொடுத்திட வேண்டும். பகடி வதை நடைபெறும் கல்லூரி நிறுவனங்களில் பல்கலைக்கழக மானியம் பெறும் தகுதியைத் திரும்பப் பெற மாவட்ட அளவிலான பகடி வதை தடுப்புக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மாவட்ட அளவிலான பகடி வதை தடுப்புக்குழு தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, மாவட்டங்களிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகடி வதை நிகழ்வுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பகடி வதை தொடர்பான புகார்களை மாணவர்கள் பதிவு செய்ய ஏதுவாக இந்திய அரசின் இணையதள முகவரியான www.antiragging.in மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்-1800-180-5522 என்ற எண்ணையும் மாணவ மாணவிகளது அடையாள அட்டையையும் கல்வி நிறுவன அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பகடி வதை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், பெறப்படும் புகார்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!