வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (12/04/2018)

கடைசி தொடர்பு:17:06 (12/04/2018)

சவப்பெட்டி, மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள்... கோவை குளங்களின் அவல நிலை!

சவப்பெட்டி, மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள்... கோவை குளங்களின் அவல நிலை!

காவிரி நீருக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காவிரி நீர் மட்டுமல்ல, அண்டை மாநிலங்கள் அனைவரிடத்துமே, நீருக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில், நமது மண்ணில் இருக்கும் நீர் நிலைகளை நாம் எப்படிப் பராமரித்து வருகிறோம் என்பதையும் பார்க்க வேண்டிய நேரம் இது.

கோவை குளங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி, கோவை மற்றும் திருப்பூரில் 160 கி.மீ ஓடும் நதி நொய்யல். அந்த நதியில் தற்போது சாக்கடை நீர்தான் ஓடுகிறது. நொய்யலை அடிப்படையாக வைத்து, கோவையைச் சுற்றி 25-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அவற்றில், 8 குளங்கள், மாநகராட்சியிடம் குத்தகைக்குச் சென்றன. மாநகராட்சியிடம் சென்றும் நிலைமை மாறவில்லை என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஒருபக்கம் ஆக்கிரமிப்புகளால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மறுபக்கம் கட்டடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், காலாவதியான உணவுகள் ஆகியவற்றைக் கொட்டும் பிறப்பிடமாகத்தான் இந்த நீர்நிலைகள் இருந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை, குளங்களை மேம்படுத்த, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ``ஆனால், குளங்களை அழகுபடுத்தும் பணிகளில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அவற்றை அழிவிலிருந்து மீட்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை” எனத் தன்னார்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கோவையில் 145 குட்டைகள் பயன்பாட்டில் இல்லை என்று ஊரகவளர்ச்சித்துறை அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது. அண்மையில், கோவை வாலாங்குளத்தை தூய்மை செய்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், குளத்திலிருந்து ஒரு சவப்பெட்டியை மீட்டெடுத்துள்ளனர். இதைத்தவிர மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என ஒரே நாளில் 3 டன் குப்பைகளை அவர்கள் அகற்றியுள்ளனர்.

சவப்பெட்டி

``பல்லுயிர்கள் சிறப்பாக வாழ்ந்திட பாட்டனும், பூட்டனும் உருவாக்கி வைத்த குளத்துக்கு, குப்பையோடு சவப்பெட்டியைப் போட்டுவைத்து, பாடை கட்டி வைத்த நிலையினை களப்பணியில் கண்டோம்” என்று அவர்கள் வேதனையுடன் அந்தச் சம்பவத்தை நம்மிடம் விவரித்தனர். பிரேத பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், புற்றுநோயாளிகளின் கழிவு நீர் அனைத்தையும் வாலாங்குளத்தில்தான் விடுகின்றனர்.

குளங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில், சாக்கடை நீரில்தான் விவசாயம் நடக்கிறது. இந்தக் குளங்களிலிருந்து பிடிக்கப்படும் மீன்களை மக்கள் உண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில், அதன் தன்மையை ஆய்வு செய்வதற்குக் கூட அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிச்சி குளத்தின் ஒரு பகுதியான சின்னக் குளத்தை, கட்டட இடிபாடுகளால், 70 சதவிகிதம் மூடியே விட்டனர். குறிப்பாக, குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் அருகே பாலங்கள் அல்லது சாக்கடைகள் கட்டவேண்டுமென்றால், பொதுப்பணித்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், அமைச்சர் வேலுமணியின் தொகுதியில் கட்டப்பட்ட ஒரு சிறு பாலத்துக்கு,பொதுப்பணித்துறையிடம் அனுமதி வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அமைச்சரின் தொகுதி என்பதால், பொதுப்பணித்துறையும் அடக்கி வாசிக்கிறது.

மதுபாட்டில்கள்

மணிகண்டன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், ``ஒவ்வொரு  புகாரையும் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றால்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இல்லையென்றால் நடவடிக்கை இல்லை. பொதுச் சொத்தை சேதம் செய்யும் நபர்கள் மீது கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்க வேண்டும். இல்லையென்றால், நம் கண் முன்னே நீர்நிலைகள் அழிந்து போகும். அதேபோல, நீர்நிலைகளைக் கண்காணிக்க தனிக் குழுவையே அமைக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு, முழு அதிகாரம் வழங்க வேண்டும்” என்றார்.

 

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``எங்களால் முடிந்த அளவுக்கு நீர்நிலைகளைச் சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். மாநகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்தினர்தான் நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக நாங்கள் பலமுறை கடிதம் எழுதிவிட்டோம். ஆனால், அவர்கள் கேட்பதாய் இல்லை” என்றவரிடம், அமைச்சரின் தொகுதியில் கட்டப்பட்ட பாலம் குறித்து கேட்டதற்கு, ``நான் இப்பத்தான் புதுசா வந்துருக்கேன்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

விஜயகார்த்திகேயன்கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குளங்களை மேம்படுத்தும் திட்டத்தை கொண்டுவந்த ஒரே மாநகராட்சி கோவைதான். குளங்களை மேம்படுத்த மூன்றுவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்பத்தத் திட்டமிட்டுள்ளோம். இவற்றில் கழிவு நீர் உள்ளே வராமல் இருப்பதற்காக, குளங்கள் குறித்து முழுவதுமாக ஆய்வு செய்து தகவல்கள் திரட்ட, தனி அமைப்பையே அமைத்துள்ளோம். அனைத்துக் குளங்களுக்கும் ப்ளூ ப்ரின்ட் தயாராக உள்ளது. அதேபோல, குளப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்து அகற்றி வருகிறோம். குளங்களில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மாநகராட்சி சார்பில் எந்தக் குளங்களிலும் குப்பைகள் கொட்டுவதில்லை. மற்ற மாநகராட்சிகளைவிட குளங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பணிகளைச் செய்து வருகிறோம்” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்