வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (12/04/2018)

கடைசி தொடர்பு:17:44 (12/04/2018)

`நாடகம் முடியட்டும் ரிமோட்டை தர்றேன்ப்பா'- ஐ.பி.எல்-க்காகத் தந்தையைக் கொன்ற மகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் எங்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் டிவி-யில் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்கவிடாத காரணத்தால் தந்தையை, பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அரக்கோணத்தில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் சாய்நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் அரக்கோணம் நகராட்சியில் கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வருகிறார். இவரின் மகன் நந்தகுமார் (35) மாற்றுத்திறனாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்ணாமலை நேற்றிரவு 9 மணி அளவில் தனியாக டிவி-யில் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்து வீடு திரும்பிய நந்தகுமார், அண்ணாமலையிடம், `நான் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க வேண்டும். ராஜஸ்தானும் டெல்லியும் விளையாடிக்கொண்டு இருக்கிறது. சேனலை மாற்று; இல்லையென்றால் ரிமோட்டைக் கொடு' எனக் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை, `இருப்பா இந்த நாடகம் முடியட்டும் தந்து விடுகிறேன்' என்று கூறியுள்ளனர். ஆனால், நந்தகுமார் அடாவடியாக 'இப்போ சேனலை மாற்றப் போறியா இல்லையா' எனச் சத்தம்போட்டுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தன் அப்பாவின் தலையில் பின்பக்கமாகப் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அண்ணாமலை அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு சத்தம் போட்டபடியே வெளியே ஓடிவந்து மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அண்ணாமலையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நந்தகுமாரைப் பிடிக்க அவருடைய வீட்டுக்குச் சென்றது போலீஸ். ஆனால், நந்தகுமார் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள நந்தகுமாரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஐ.பி.எல் போட்டி பார்ப்பதற்கு ஏற்பட்ட தகராறில் தந்தையைக் கொலை செய்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க