`15 ஆண்டுகளாகக் காவிரிக்கு அமைதியாகவே போராடிவருகிறோம்' - ரோகிணி  | Iam protesting in a peacefull manner for last 15 years - Film star Rohini

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (12/04/2018)

கடைசி தொடர்பு:17:13 (12/04/2018)

`15 ஆண்டுகளாகக் காவிரிக்கு அமைதியாகவே போராடிவருகிறோம்' - ரோகிணி 

ரோகிணி

காவிரி நீருக்காகக் கடந்த 15 ஆண்டுகளாக அமைதியான அணுகுமுறையைத்தான் கடைப்பிடித்து வருகிறோம் என்று நடிகையும் இயக்குநருமான ரோகிணி கூறியுள்ளார். 

நடிகர் சங்கத்தின் சார்பிலும் தமிழர் கலை இலக்கியப் பேரவை எனும் புதிய இயக்கத்தின் சார்பிலும் காவிரி உரிமைக்காகத் தமிழ்த் திரையுலகினர் குரல் கொடுத்துவருகிறார்கள். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதுகாப்பான உணவு போன்றவை தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் நடிகை ரோகிணி, இன்று தன் முகநூல் பக்கத்தில் காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நம்முடைய விவசாயிகளுக்கு தண்ணீர் வர வேண்டும்... இதுதான் கடந்த 15 ஆண்டுகளாக அமைதியான அணுகுமுறையாக இருந்துவருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 
கவன உணர்வுடன் கூறப்பட்டுள்ள இந்தப் பதிவு குறித்து, ரோகிணியிடம் கேட்டோம். 

”வாரியம் அமைக்க வேண்டும் எனும் கோரிக்கையை நாம் அமைதியான போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தலாம். இதேவேளை, நடந்துள்ள சில வன்முறைகளை நான் ஆதரிக்கவில்லை. இதற்காகப் போராட்டமே நடத்தக் கூடாது என்பது சரியல்ல. ஏன் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது எனச் சிலர் கேட்கிறார்கள். அதற்கு நாம் விளக்கம் தர வேண்டியிருக்கிறது. மிகவும் இக்கட்டான நிலையில் நம் விவசாயிகள் இருக்கிறார்கள். தீர்ப்பை அமல்படுத்தாமல் தாமதப்படுத்துவது, ‘ஸ்கீம்’ என்றால் என்ன என விளக்கம் கேட்பது போன்ற செயற்பாடுகள், முன் எப்போதும் நடந்திராதது. தீர்ப்பைச் செயல்படுத்தாமல் இருந்தது, ஏற்றுக்கொள்ள முடியாத தாமதம். நமக்கு உடனடியாக வாரியத்தை அமைக்க வேண்டும். அதை ஏன் தாமதப்படுத்த வேண்டும். மே 3-ம் தேதிவரை கெடு விதித்திருக்கிறது. நீதிமன்றம். அதற்கு அடுத்த வாரத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மேலும், தள்ளிப் போய்விடுமோ எனும் பயத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.

எனவே, ஐ.பி.எல் போராட்டத்தை இப்போது இங்கு நடத்த வேண்டாம் எனக் கேட்பதற்குப் பின்னால் உள்ள காரணத்தை, உரியவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்னால் ஜெயலலிதா அம்மா இருந்தபோது, கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது எனச் சொல்லி, தடுக்கப்பட்டதுதானே. காரணம், இக்கட்டான நிலைமை..! இப்போதும் அரசே போட்டிகள் கூடாது எனச் சொல்ல உரிமை இருக்கிறது. போராட்டம் ஏன் வெடித்தது என்பதை உணர்வுபூர்வமாக அனைவரும் புரிந்துகொண்டால், எல்லாம் சரியாக நடந்துவிடும். இத்தனை வருஷங்கள்... தண்ணீர்த் தேவைக்கான போராட்டம்..! எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளும் அதைப் பார்த்த மக்களும் அவர்களாகவே இந்த இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எல்லா நியாயங்களுக்கும் இணையாக, போராட்டத்தில் எந்த வன்முறைக்கும் இடம் இருக்கவும்கூடாது என்பதும் முக்கியம்!” என்று கறாராகவும் போராட்டத்தில் விவசாயிக்கான நீதியில் அழுத்தமாக நின்றும் பேசினார் ரோகிணி.