போராட்டத்தில் கிணற்றில் தவறிவிழுந்த வாலிபர்! அதிரடியாகக் களத்தில் இறங்கி காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் 

இன்ஸ்பெக்டர் ஜவஹர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தார். இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கிணற்றில் குதித்து அந்த வாலிபரைக் காப்பாற்றியது அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடந்த ராணுவ கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழர் அமைப்பினர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பழைய வண்ணாரப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜவஹர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு தரையோடு தரையாக இருந்த கிணற்றில் ஒருவர் தவறி விழுந்தார். இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் ஜவஹர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாகக் கிணற்றில் குதித்தார்.

கிணற்றில் விழுந்த வாலிபர்

கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தது. உடனடியாக மேலே இருந்த காவல்துறையினர் கயிற்றை ஜவஹரிடம் கொடுத்தனர். முகம் குப்புறக்கிடந்த அந்த நபரின் இடுப்பு மற்றும் கால்களில் கயிற்றைக் கட்டினார். பின்னர், கயிற்றை மேலே தூக்கிப்போட்டார் ஐவஹர். கயிற்றைப் பிடித்துக்கொண்ட மற்ற காவலர்கள், அந்த நபரை மேலே தூக்கினர். கிணற்றில் விழுந்ததில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜவஹருக்கும் காலில் அடிபட்டது. காயம் அடைந்த நபர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிணற்றில் விழுந்தவர் ஜெயக்குமார் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

கிணற்றில் விழுந்தவரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இன்ஸ்பெக்டர் ஜவஹர் காப்பாற்றியது அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!