எட்டு எம்.எல்.ஏ-க்கள்... 351 பெண்கள்... மொத்தம் 3,070 பேர்! - காவல்துறையின் கறுப்புக்கொடி கைது லிஸ்ட் 

போராட்டம்

 சென்னையில் பிரதமர் நரேந்திரமோடிக்குக் கறுப்புக்கொடி காட்டிய எட்டு எம்.எல்.ஏ-க்கள், 351 பெண்கள் என மொத்தம் 3070 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பயணம் நடந்துவருகிறது. இந்தநிலையில், காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை இணைந்து ஐ.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக் குழுவைச் சேர்ந்த சினிமா இயக்குநர் களஞ்சியம், கரூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சங்கர் நகர் காவலர் ஜெயச்சந்திரன் கடுமையாகத் தாக்கப்பட்டனர். காவலர் ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் சீமான் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் எனப் பத்துப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னைக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திரமோடிக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்தது. சென்னையில், திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மனித நேய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமை, சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க ஆகிய கட்சிகளின் சார்பில் 28 இடங்களில் போராட்டம் நடந்தது. 

போராட்டம்


 கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்ட அன்பழகன், குப செல்வம், மோகன், சுந்தர், சுதர்சனம், தமீமுன் அன்சாரி, தனியரசு எம்.எல்.ஏ உள்பட எட்டு எம்.எல்.ஏ-க்களும் 351 பெண்கள் என மொத்தம் 3,070  பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 
 ஏற்கெனவே கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தேடப்பட்டுவரும் சீமானை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதனால், அவர் இருக்கும் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பதற்றமான சூழல் நிலவியது. போராட்டக் குழு சார்பில் இந்தத் தகவல் தொண்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட மண்டபத்தில் ஏராளமான அதிரடி விரைவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரிமாண்ட் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகிவருகிறது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சீமான் மீது ஏற்கெனவே கொலை மிரட்டல், கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற தலைவர்களை ரிமாண்ட் செய்வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றனர். 

 இதற்கிடையில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், வீட்டில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. அதில், மோடி திரும்பிச் செல் என்ற வாசகம் இடம்பிடித்திருந்தது. அனுதியில்லாமல் பலூன் பறக்கவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த ராட்சத பலூனும் இறக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!