`வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயல்படுகிறதா என முதல்வர் கண்காணிக்கணும்' - எவிடன்ஸ் கதிர்

 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எவிடன்ஸ் கதிர் பத்திரிகையாளர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர், கடந்த 20.3.2018 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே கோயஸ், யூ.யூ.லலித் ஆகியோர் பட்டியல் மற்றும் பழங்குடியினரின் வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தி வருவதால் இந்தச் சட்டம் மூலம் அப்பாவி அரசு ஊழியர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவதால், இதுகுறித்த புகாரில் விசாரணை செய்துவிட்டு வழக்கை பதிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு நம்முடைய நீதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு எதிரானது. 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தண்டனை சதவிகிதம் குறைவாக இருப்பதால் வழக்கு தவறாகப் பதியப்பட்டு வருகிறது. நீதிபதிகள் கூறியுள்ள தீர்ப்பின்படி பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றங்களுக்கும் விசாரணை செய்துவிட்டு வழக்கு பதிவு செய்ய முடியுமா?

வன்கொடுமைகளை விசாரணை செய்து தடுக்க வேண்டிய புலன்விசாரணை அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர உதவி ஆணையாளர் ஆகியோர் பாகுபாடுடன் செயல்படுகின்றனர். வன்கொடுமை பொறுத்தமட்டில் 65 % எஸ்.சி மக்களுக்கு எதிராகவே குற்றவாளிகள் பதியப்பட்டு வருகின்ற நிலை இருக்கிறது. இந்தச் சட்டம் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநில அளவில் முதலமைச்சரை தலைவராகக் கொண்ட 25 பேர் கொண்ட குழு இருக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை இந்தக்குழு கூடி தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் நிலைகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், இந்தத் தீர்ப்பு குறித்து அரசுக்கும் பொது சமூகத்துக்கும் சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம். பாராளுமன்ற நிலைக்குழு, தேசிய சட்ட ஆணையம், குடியரசு தலைவர் ஆகியோர் கொண்ட குழு உடனே உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தத் தீர்ப்பால் பட்டியல் மற்றும் பழங்குடியினர் பாதிக்கப்பட்டு வருவதால் இதன் உண்மையை அறிய தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம். தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் சட்ட வல்லுநர்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!