வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (12/04/2018)

கடைசி தொடர்பு:20:20 (12/04/2018)

இடி மின்னலுடன் பலத்த மழை! நெல்லையில் வீட்டில் பற்றி எரிந்த டிவி

நெல்லையில் இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் சலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள டிவி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் இடிமின்னலுடன் பரவலாகப் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள டிவி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பலத்த மழை - மின்னல் தாக்குதல்

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டிவதைத்தது. கடந்த வாரத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோடைக்காலத்தை எப்படிச் சமாளிப்பது என மக்கள் அஞ்சும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று நெல்லை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. 

இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளிலும் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர்ந்தவாறு செல்லும் நிலை உருவானது. இதனிடையே நெல்லை மீனாட்சிபுரத்தில் மின்னல் காரணமாக மின் இணைப்பில் உயர் அழுத்தம் ஏற்பட்டதால், கண்ணன் என்பவரது வீட்டில் இருந்த டிவி திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

உடனடியாகப் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாகப் பெய்துள்ள மழையால் மக்கள் மனம் குளிச்சியடைந்துள்ளனர்.