Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறையில் வளர்மதிக்கு நடந்த கொடுமை! - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

காவிரி மற்றும் கதிராமங்கலம் பிரச்னைக்காகப் போராடியவர்களைப் போலீஸார் சித்ரவதை செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதி, மாணவி குறிஞ்சித்தேன் ஆகியோருக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராடிவரும், கதிராமங்கலம் மக்களை சந்திப்பதற்காக கடந்த 7-ம் தேதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி, மதுரை சட்டக்கல்லூரி மாணவி குறிஞ்சித்தேன், இயற்கை பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த மகாலெட்சுமி, வழக்கறிஞர் மனோகரன் மற்றும் பால்சாமி ஆகியோர் சென்றனர். அவர்களைத் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்த போலீஸார், கலகத்தைத் தூண்டுதல், பணி செய்ய தடுத்தது, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததுடன், 3 வயது கைக்குழந்தையுடன் இருந்த மகாலெட்சுமியைத் தவிர்த்து மற்றவர்களைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மகாலட்சுமி - திருச்சி சிறை செய்தி

நடந்ததை நம்மிடம் விளக்கினார் மகாலெட்சுமி, “மக்களின் வாழ்வுரிமைப் பிரச்னைகளுக்காகப் போராடும் சி.பி.சி.எல், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட 24 அமைப்புகள் இணைந்து, “இயற்கை பாதுகாப்பு குழு” எனும் கூட்டமைப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இதன் ஒருங்கிணைப்பாளராக வளர்மதி செயல்பட்டு வருகிறார். எங்கள் குழு, சில வாரங்களுக்கு முன்பு, ஸ்டெர்லைட்-க்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ளச் சென்றபோது, போலீஸார் அனுமதி மறுத்தனர். அடுத்துதான் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, கதிராமங்கலத்தில் போராடும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டோம்.

அதன்படி நாங்கள் கடந்த 7-ம்தேதி காலை திருச்சி வழியாகத் தஞ்சாவூர் சென்றோம். அங்கிருந்து கதிராமங்கலம் செல்ல பேருந்தில் ஏறினோம். அங்கு வந்த உளவுத்துறை போலீஸார் மற்றும் பெண் காவலர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து, எங்களைக் கைது செய்தனர். இது ஜனநாயக நாடு, நாங்கள் பேருந்தில் பயணம் செய்யக் கூடாதா எனக் கேள்வி எழுப்பினோம். அதைக் காதில் வாங்காத போலீஸார், எங்களை வலுக்கட்டாயமாக இழுத்து ஆட்டோவில் ஏற்றினர். அப்போது வளர்மதியின் உடைகள் கிழிந்தது. உடலில் காயங்கள், நகக் கீறல்கள் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட எங்களை, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து இரவு 10 மணி வரை விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸார் 6 முறை என்னிடம் தனியாக விசாரணை நடத்தி, கைக்குழந்தையோடு இருக்கும் உங்களை மட்டும் காவல்நிலைய ஜாமீனில் விடுகிறோம் என்றார்கள். ஆனால் நானோ, நாங்கள் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துதான் போராடுகிறோம். வழக்குப் போட்டால், என்னையும் என் 3 வயது மகன் புகழேந்தியையும் சேர்த்து ஆறுபேர் மீதும் வழக்கு போடுங்கள். இல்லையெனில், எந்தத் தவறு செய்யாத எங்களை விடுவியுங்கள் என்றேன். அதைக் காதிலேயே வாங்காத போலீஸார், 4 பேர் மீது மட்டும் நீதிபதி ராமசங்கரன் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள். நீதிபதியிடம்கூட எங்கள் தரப்பு நியாயத்தைக் கூற விடவில்லை. நள்ளிரவில் தன்னந்தனியாகத் தஞ்சாவூரிலிருந்து கிளம்பி வந்தேன்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதி ஆகியோரைச் சித்ரவதைச் செய்வதாக வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். அடக்குமுறைகளால் மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசிடம் இவை எதிர்பார்த்ததுதான்” என்றார் காட்டமாக.

ராஜா - திருச்சி சிறை ஆர்டிகள்

வளர்மதியை நேரில் சந்தித்த வழக்கறிஞர் ராஜா, “சிறையில் இருக்கும் வளர்மதி, குறிஞ்சித்தேன் ஆகியோரை திருச்சி பெண்கள் சிறையில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்ய முயன்றபோது அதற்கு தோழர்கள், கடந்த முறை கைதுசெய்யப்பட்டபோது, இதைக் கண்டித்தோமே என எதிர்ப்பு தெரிவித்ததால், நிர்வாண சோதனைக்கு உட்படுத்தவில்லை. இந்நிலையில் காவிரிக்காகப் போராடி கைதாகி சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவனின் தங்கை பாடகி லதா ஆகியோர், சிறை நிர்வாகத்திடம் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் `நாப்கின்’ கேட்டுள்ளனர். அப்போது சிறைக்காவலர், எல்லாநாளும் நீங்க நாப்கின்தான் பயன்படுத்துவீங்களா. ஸ்டாக் இல்லை எனக் கூறியிருக்கிறார்கள். இதேபோல், சிறைக்கைதிகள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் போன் பேச அனுமதி உள்ளது. ஆனால், வளர்மதி உள்ளிட்ட தோழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் உரிமைக்குப் போராடுபவர்களை, கைது செய்து உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்வதை அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது” என ஆதங்கப்பட்டார்.

குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க நாம் தொடர்புகொண்ட சிறைத்துறை அதிகாரிகள், “சிறைக்குள் சிறை விதிமுறைப்படிதான் சோதனை நடத்துகிறோம். இதே வளர்மதி, கடந்த முறை கைது செய்யப்பட்டபோது, நிர்வாணப்படுத்தினார்கள், சித்ரவதை செய்தார்கள் எனக் கூறினார். இப்போதும் அதையே சொல்கிறார். சிறைக்குள் தங்களை சித்ரவதை செய்ததாக அவர்கள் சொல்வதில் துளியும் உண்மையில்லை” என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement