தி.மு.க-வினரின் கறுப்புக்கொடிக்கு எதிராக பா.ஜ.க-வினர் நடத்திய போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தி.மு.கவினர் ஏற்றிய கறுப்புக் கொடிக்கு எதிராக பா.ஜ.க.வினர் தங்களது கட்சிக் கொடியினைக் கட்டி போராட்டம் நடத்தினர். 

கறுப்புக் கொடி போராட்டம்

காவிரி மேலாண்மை அமைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் எனத் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை அமைக்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக இதனை அமைத்திட வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் காவிரி உரிமை மீட்புப் பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 

இதற்கிடையில் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பார்வையிடுவதற்காகச் சென்னை வந்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர், விவசாயச் சங்கத்தினர் ஆகியோர் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் மோடி வந்து இறங்கிய நேரத்தில்கூட, அந்தப் பகுதியில் கறுப்புப் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் தி.மு.கவினர் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எட்டயபுரத்தில் தி.மு.கவினர் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.கவினர் தி.மு.க., கறுப்புக் கொடிக்கு எதிராக, எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் பா.ஜ.க கொடியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!