வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (12/04/2018)

`அப்பா உங்களைப்பத்திதான் எல்லாக் கூட்டத்திலயும் பேசுறாரு!’ - கருணாநிதியிடம் நெகிழ்ந்த உதயநிதி

கடலூரில் நடைபெறும் கூட்டத்துக்குச் செல்லும் முன் கருணாநிதியிடம், உதயநிதி ஸ்டாலின் விடைபெற்றுச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. 

கருணாநிதியுடன் உதயநிதி ஸ்டாலின்

உடல்நலக் குறைபாட்டால் சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கிறார். நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அவர் தவிர்த்து வருகிறார். சென்னை வரும் பல்வேறு தலைவர்கள் அவரைச் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தநிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகையைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அதேபோல், கறுப்புச் சட்டை அணிந்தும் அவர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தார். 

இந்தநிலையில், கடலூர் கூட்டத்துக்குச் செல்லும் முன் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியிடம் விடைபெறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், `திருவாரூரிலிருந்து கடலூருக்கு அப்பா நடந்து வந்து கொண்டிருக்கிறார். கடலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். எல்லாப் பொதுக்கூட்டத்திலேயும் அப்பா உங்களைப் பத்திதான் பேசுறார். டிவில பார்த்தீங்களா?’ என்று உதயநிதி கேட்க, கருணாநிதி சிரித்தபடியே அதைப் புரிந்துகொண்டது போல் தலையசைக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.