வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (12/04/2018)

கடைசி தொடர்பு:21:30 (12/04/2018)

`விலா எலும்பே முறிந்துவிட்டது!’ - கலங்கும் களஞ்சியம் ஆதரவாளர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் தமிழர் பேரியக்கத் தலைவர் களஞ்சியம் மற்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.  

காயமடைந்த களஞ்சியம் மற்றும் ரமேஷ்

சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கடந்த 10-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், பாரதிராஜா, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸாரைத் தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் போராட்டத்தின் போது சிலர் போலீஸாரைத் தாக்கியதாகவும், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தநிலையில், போலீஸார் தாக்குதலில் காயமடைந்த இயக்குநரும், தமிழர் பேரியக்கத் தலைவருமான களஞ்சியம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், போலீஸார் தாக்குதலில் அந்த இயக்கத்தின் கரூர் நகரப் பொறுப்பாளர் ரமேஷ் என்பவர் விலா எலும்பு முறிந்து அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து தமிழர் பேரியக்கத்தைச் சேர்ந்த சீலனிடம் பேசினோம். ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், இந்தச் சூழலில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்பகுதியில் உள்ள D1 காவல் நிலையம் வரை சென்று போராட்டம் நடத்த போலீஸார் அனுமதித்திருந்தனர். போராட்டத்தின்போது, D1 காவல்நிலையம் முன்பாக திடீரென தடுப்பு அமைத்த போலீஸார், எங்கள் இயக்கத் தலைவர் களஞ்சியம் உள்ளிட்டோரைத் தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் களஞ்சியம் காயமடைந்தார். அவருக்குத் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. 

அதேபோல், எங்கள் இயக்கத்தின் கரூர் நகரப் பொறுப்பாளர் ரமேஷைப் போலீஸார் கடுமையாகத் தாக்கினர். இதில், இடுப்புப் பகுதியில் விலா எலும்பு முறிந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விலா எலும்பு முறிந்ததால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவசரச் சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் ஒருநாள் சிகிச்சை பெற்ற அவர், நேற்றிரவுதான் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது எந்தவிதத்தில் நியாயம்?’’ என்று முடித்தார் ஆதங்கத்தோடு.