`ஐந்தே நிமிடங்களில் டிக்கெட்!’- பயணிகளின் சுமையைக் குறைக்க ரயில்வே புதிய திட்டம்!

 

 

பண்டிகை, விடுமுறை காலங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதனால், பயணிகளுக்கு 5 நிமிடங்களில் ரயில்வே டிக்கெட்கள் கிடைக்க, ரயில்வே நிர்வாகம் புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ள,‘5 நிமிடங்களில் ரயில்வே டிக்கெட்’ திட்டத்தின் படி, ரயில்வே பயணிகள் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள், சீசன் டிக்கட்டுகள் மற்றும் நடைமேடைச் சீட்டுகளை தங்களது செல்போன்களைப் பயன்படுத்தி வாங்க உதவும் `UTS'  (UTSON MOBILE) என்னும் செயலி தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. ஜி.பி.எஸ். (GPS) அடிப்படையிலான இந்தச் செயலியை ரயில் பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான பணப்பரிவர்த்தனைக்கு ரயில்வேயின் பிரத்யேக ‘K-Wallet’ -ல் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ பணம் செலுத்தலாம். இதுவரை காகிதப் பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணிகள் பயணம் செய்ய உதவும் வகையில் சென்னைப் புறநகர் ரயில் சேவைகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்தச் செயலி தற்போது தெற்கு ரயில்வே முழுவதும் சுமார் 20 லட்சம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை சுமார் 91 சதவிகிதமாகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தச் செயலி மூலம் காகிதம் இல்லாத ரயில் டிக்கட்டுகளை ரயில் நிலைய வளாகத்திலிருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவுக்குள் பதிவுசெய்து தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் இந்தச் செயலி செயல்படாது. இதுகுறித்து உதவி பெற பயணிகள் முக்கிய ரயில்நிலையங்களில் 24 மணி நேரம் இயங்கும் உதவி மையங்களையோ அல்லது utsonmobile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!