வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:23:00 (12/04/2018)

`கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு!’ - வழக்கறிஞரைச் சுற்றும் சர்ச்சை

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை முறைகேடு செய்ததாக வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து

2004-ம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தார்கள். 18 குழந்தைகள் காயமடைந்தார்கள். இவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இறந்த குழந்தைகளுக்குத் தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்த குழந்தைகளுக்குத் தலா ரூ.6 லட்சம், காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், சிறிய அளவில் காயமடைந்த குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி பாலகிருஷ்ணன் கமிஷன் உத்தரவிட்டது.

கடந்த 21.12.2016 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மூலம் இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில்தான், இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞர் தமிழரசன், இழப்பீட்டுத் தொகையை மிகவும் சாதுர்யமாக முறைகேடு செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறுகிறார்கள். அபகரிக்கப்பட்ட தொகையைப் பெற்றுத்தரக் கோரி கும்பகோணம் கிழக்குக் காவல்நிலையம் முன் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘வழக்கறிஞர் தமிழரசன் மீது நாங்க ரொம்பவே நம்பிக்கை வெச்சிருந்தோம். இதை அவர் தவறா பயன்படுத்திக்கிட்டார். தொகை, தேதி எதுவும் குறிப்பிடாமல் எங்களோட செக்ல கையெழுத்து போடச் சொல்லி வாங்கிக்கிட்டாரு. அதை முறைகேடாகப் பயன்படுத்தி, எங்களோட வங்கிக் கணக்குல இருந்து இரண்டரை லட்சம் ரூபாயை எடுத்துக்கிட்டார். நாங்க எல்லாருமே ரொம்ப ஏழ்மையான நிலையில இருக்கோம். எங்களோட குழந்தைகளோட எதிர்காலத்துக்குப் பயன்படணுமேனுதான் அந்தப் பணத்தை எடுக்காமலே இருந்தோம். ஆனா இப்ப அந்தப் பணம் கைவிட்டுப் போயிடுச்சு” என ஆதங்கப்படுகிறார்கள்.

ஆனால், வழக்கறிஞர் தமிழரசனோ, `இந்த புகாரில் கொஞ்சமும் உண்மையில்லை’ எனவும் தன்னிடம் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் அவர்களது தூண்டுதலின் பேரிலேயே, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் தன்மீது புகார் தெரிவிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். முறையான விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.