வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/04/2018)

கடைசி தொடர்பு:00:26 (13/04/2018)

12-ம் வகுப்பு விடைத்தாளைத் திருத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முதுகலை ஆசிரியர்கள்!

ஊதிய முரண்பாடு பிரச்னையைச் சீர்செய்யக் கோரி பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தாமல் தமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பனிரெண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தமிழ்செல்வன்இதுகுறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட பரப்புரைச் செயலாளர் தமிழ்செல்வன், ``6-ம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் 11,12ம் வகுப்பிற்கு பாடம் எடுக்கும் முதுகலை ஆசிரியர்களான எங்களுக்கும் ஊதிய முரண்பாடு இருந்து வருகிறது. 6-ம் வகுப்பு ஆசிரியர்களுக்களை விட எங்களுக்கு ஊதியம் ரூ.3,500  குறைவாகக் கொடுக்கிறார்கள். அவர்களை விட பணி சுமை அதிகம் உள்ள எங்களுக்கு, ஊதியம் குறைவாகக் கொடுக்கப்படுவது நியாயமா?. இதைச் சீர்படுத்தக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம், மொட்டை அடித்து போராட்டம், சட்டமன்ற முற்றுகை போராட்டம் என அறவழியில் பல போராட்டங்கள் செய்தும் பயன் இல்லை.

இதையடுத்து தற்போது தமிழ்நாடு முழுவதும் முதுகலை ஆசிரியர்கள் பதினொன்றாம் வகுப்பு தேர்வு தாள்களையும், பனிரெண்டாம் வகுப்பு தேர்வுத் தாள்களையும் திருத்தாமல் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகிறோம். சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி தேர்வு தாள் திருத்தும் மையத்தில் 1,400 ஆசிரியர்களும், தாரமங்கலத்தில் உள்ள தேர்வுத் தாள் திருத்தும் மையத்தில் 800 ஆசிரியர்களும், ஆத்தூர் தேர்வுத் தாள் திருத்தும் மையத்தில் 950 ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இன்னும் 3 நாட்களுக்கு இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடந்து நடத்துவோம். அரசு எங்களை கூப்பிட்டு பேசாமல் இருந்தால், தேர்வு தாள்களை திருத்தாமல் வெளியேறி போராட்டத்தில் ஈடுபடுவோம். இதனால் குறித்த காலத்திற்குள் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வருவதில் சிக்கல் ஏற்படும்'' என்றார்.