வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (13/04/2018)

கடைசி தொடர்பு:00:30 (13/04/2018)

மீன்பிடித் தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கடைசிநாளில் கடலில் விழுந்து மீனவர் மாயம்!

 மீன்பிடி தடைக் காலம் துவங்குவதற்கு முந்தைய நாளில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர் கடலில் மூழ்கி மாயமானது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீன்பிடி தடைக் காலம் துவங்குவதற்கு முந்தைய நாளில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர் கடலில் மூழ்கி மாயமானது, அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஜெபநேசன்

ஆண்டு தோறும் மீன் இனப்பெருக்கத்திற்காக சென்னை தொடங்கி கன்னியாகுமரி இடையிலான வங்கக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ம் தேதி வரை 45 நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும். கடந்த ஆண்டு முதல் தடைக்காலம் 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான தடைக் காலம் ஏப்ரல் 14 சனிக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. இந்த நாள்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது.

ராமேஸ்வரத்தைப் பொருத்தமட்டில் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்களுக்கு ஓய்வு நாளாகும். இதனால் தடைக் காலத்துக்கு முந்தைய கடைசி மீன்பிடிப்பிற்காக நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று விட்டு இன்று கரை திரும்பினர். இந்நிலையில் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான படகில் பாஸ்கரன், சிவா, தமிழ், மாணிக்கம், கென்னடி, ஜெபநேசன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று காலை கரை திரும்பி கொண்டிருந்தனர். படகு கரைக்கு வர 25 மீட்டர் தூரமே இருந்த நிலையில் படகின் மேல் புறம் நின்று கொண்டிருந்த மீனவர் ஜெபநேசன் (33) திடீரென கடலில் தவறி விழுந்தார். கரைக்கு அருகாமையில் தவறி விழுந்ததால் நீந்தி படகில் ஏறிவிடுவார் என நினைத்த மற்ற மீனவர்கள் ஜெபநேசனை பார்த்தபடி இருந்துள்ளனர். நேரம் செல்ல செல்ல பதட்டம் அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து ஜெபநேசனை தேடியுள்ளனர். வெகு நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் கரை திரும்பினர். பின்னர் இதுகுறித்து கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாரிடம் மீனவர்கள் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் கடலில் விழுந்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இன்று (வியாழன்) மாலை வரை ஜெபநேசனை கண்டுபிடிக்க முடியவில்லை. தடைக் காலத்துக்கு முந்தைய கடைசி கடல் நாளில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஜெபநேசன் மாயமானதால், அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.