வெளியிடப்பட்ட நேரம்: 01:42 (13/04/2018)

கடைசி தொடர்பு:07:29 (13/04/2018)

`இன்னும் 15 நாள்களில் பொதுமக்களே போராடுவார்கள்' - மோடிக்கு எதிராக கொந்தளிக்கும் தி.மு.க!

தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்த மோடியை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் வீடுகளில் கறுப்புக்கொடிகளை கட்டி எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள். அதன்படி, சேலம் மாவட்டத்திலும் தி.மு.க-வினர் பரவலாக கறுப்புக்கொடிகளை வீட்டின் மீது கட்டி தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்..

இதுகுறித்து சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் பேசும்போது, ''மத்திய மோடி அரசாங்கம் மக்கள் குடிக்கும் குடிநீரில் அரசியல் செய்து வருகிறது. ஜனநாயக நாட்டில் சட்டத்தின் படி ஆட்சி நடைப்பெற்று வரும் இந்தியாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறார். இதையடுத்து எங்கள் செயல் தலைவர் தளபதி அறிக்கையை அடுத்து எங்கள் வீட்டில் கறுப்புக்கொடிகளை கட்டி இருக்கிறோம்.

தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி பேசும்போது, ''பொதுமக்கள் தாங்களாகவே அவர்கள் வீட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கறுப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். இதை ஒவ்வொருவரும் உணர்வு பூர்வமாக செய்திருக்கிறார்கள். கட்சி வேறுபாடு இல்லாமல் இதை செய்து வருகிறார்கள்.

காவிரி நீர் விவசாயத்திற்கு வருவது  ஒரு பக்கம் இருந்தாலும் சேலம், தர்மபுரி போன்ற பல மாவட்டங்களுக்கு காவிரியில் இருந்து மட்டும் 90 சதவீதம் குடிநீர் எடுக்கப்படுகிறது. 10 சதவீதம் ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூரில் இருக்கும் நீர் இன்னும் 15 நாட்களுக்குள் தான் வரும். அதன் பிறகு ஒவ்வொருவரும் காலி குடங்களோடு ரோட்டில் வந்து அமர போகிறார்கள். மாநிலத்தில் இந்த அ.தி.மு.க., அரசு இருக்கும் வரை மத்திய அரசு எதுவும் செய்யாது. தமிழகத்தின் ஒட்டு மொத்த பிரச்னை பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய மோடி அரசாங்கம் காது கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க