வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (13/04/2018)

கடைசி தொடர்பு:10:12 (13/04/2018)

இன்று பிரதமர்... நாளை கவர்னர்... காவிரிக்காகத் தொடரும் கறுப்புக்கொடி போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எழுச்சியோடு கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று தமிழகம் வந்த மோடிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள்  நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எழுச்சியோடு கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று தமிழகம் வந்த மோடிக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள்  நடைபெற்றது. இதேபோல, நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர் திருவையாறு அருகே கோயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகைதரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கறுப்புக்கொடி காட்டிப் பலத்த எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது கல்யாணபுரம். இந்த ஊரில் பிரசித்திபெற்ற சீனிவாசப்பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்ச்சியாகக் கருட சேவை நாளை (13.4.18) மாலை நடக்க இருக்கிறது. இந்தக் கருடசேவை நிகழ்ச்சியை மாலை 5 மணியளவில் கவர்னர்  தொடங்கிவைக்க இருக்கிறார்.

இதற்காக விமானம்மூலம் திருச்சி வரும் கவர்னர், பின்னர் கார் மூலம் தஞ்சாவூர் வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் கோயிலுக்குச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். இதற்கான பாதுகாப்புகுறித்து மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 

இந்த நிலையில்,  ஏற்கெனவே தமிழகத்தின் பல பகுதிகளில் ஆய்வுக்கு வந்த கவர்னருக்கு, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் பல அமைப்புகளும் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தஞ்சாவூர் வரும் கவர்னருக்கு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்திப் பல இடங்களில், பல்வேறு அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தஞ்சைப் பகுதி இப்போதே பரபரக்கத் தொடங்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க