`அடிக்கடி இங்கே வருவேன்' - விவசாயி தோட்டத்திற்கு திடீர் விசிட் அடித்த டி.ஆர்.ஓ

அலுவல் நிமித்தமாகச் சென்றபோது, பச்சை போர்த்தி இருந்த தோட்டத்தில் கரூர் டி.ஆர்.ஓ திடீர் விசிட் அடித்ததோடு, அங்கே அரைநாள் வரை அதைப் பார்வையிட்டு, விவசாயத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார்.

டி ஆர் ஓ

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தென்னிலையில் நடந்த ஒரு விழாவுக்குச் சென்றிருக்கிறார், கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ். அவரோடு, ஆர்.டி.ஓ சரவணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். அங்கு நடந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு, 11 மணி  அளவில் கரூர் நோக்கிச் சென்றார். அப்போது, வேட்டையார்பாளையம் என்ற ஊரில், சுற்றி பாலைவவனம்போல் வறட்சி நிலவ, நடுவில் ஒரு தோட்டம் மட்டும் பசுமை போர்த்தி இருந்தது. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட டி.ஆர்.ஓ, நேராக வண்டியை தோட்டத்துக்குள் விடச் சொல்லியுள்ளார்.  அத்தனை அரசாங்க வாகனங்களையும் பார்த்துக் குழம்பிய தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் இயற்கை விவசாயி மனோகரன், டி.ஆர்.ஓ வந்ததன் நோக்கத்தைத் தெரிந்துகொண்டதும் குஷியானார். 

``பாலைவனம் போல வறட்சியாக இருக்கும் பகுதியின் நடுவில் இப்படிப் பசுமையாக மாற்றி இருக்கும் உங்களின் முயற்சி உண்மையில் அளப்பரியது. இந்தச் சோலையை உருவாக்கிய உங்களைப் பார்க்கணும்; பாராட்டணும்னு தோணுச்சு. அதான் வந்தேன்" என்று சொல்ல, அதற்கு மனோகரன், "நான் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர். ஆறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறேன். இங்கே இல்லாத பயிரே இல்லை" என்றார். அதிகாரிகளோடு பண்ணையைச் சுற்றிப்பார்த்து ரசித்த டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷையும், ஆர்.டி.ஓ சரவணமூர்த்தியையும் ஆளுக்கொரு தென்னை மரக்கன்றுகளை தனது பண்ணையில் நடச் செய்தார் மனோகரன். மனோகரன் கொடுத்த இளநீரை வெயிலுக்கு இதமாகப் பருகியபடி, "அடிக்கடி இங்கே வருவேன்" என்று சொல்லிவிட்டு கரூருக்குக் கிளம்பினார் டி.ஆர்.ஓ. 

இதற்கிடையே, அந்தத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் கன்று தொடங்கி திருவோட்டு மரம் வரை அனைத்துப் பயிர் வகைகளையும் பற்றி ஆற அமர பார்வையிட்ட டி.ஆர்.ஓ, "விவசாயிகளின் பொழப்பு ஆயிரம் டி.ஆர்.ஓ பணிகளுக்குண்டான சிரமங்களுக்குச் சமம்" என்று சிலாகித்துச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!