`ஒருபோதும் விளம்பரத்துக்காகப் போராட்டம் நடத்த மாட்டேன்' - ஈரோட்டில் கலகலத்த ஜெ.தீபா!

 `காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன்' என ஜெ.தீபா கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஜெ தீபா

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா பேசுகையில், ``கடந்த 15 நாள்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனப் போராடிவருகிறோம். இருந்தும், அதை முற்படுத்த செவிசாய்க்காமல் இருந்துவருகிறது மத்திய அரசு. மாநில அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல்போனதற்கு, மாநில அரசு முறையான அழுத்தம் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தக் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்" என்றார்.

தொடர்ந்து, ``கடந்த 3 மாதத்திற்கு முன்பாகவே ஸ்டெர்லைட் பிரச்னை காரணமாக அப்பகுதி மக்கள் என்னிடம் மனு கொடுத்திருந்தார்கள். இன்றைக்கு மக்கள் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த ஆலையை மூட வேண்டும். மக்கள் தேவைக்காகத்தான் நான் போராட்டம் நடத்துவேன். ஒருபோதும் விளம்பரத்துக்காகப் போராட்டம் நடத்த மாட்டேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்துவோம். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ், காவிரி விவகாரத்தில் வெறும் கண்துடைப்பாகச் செயல்படுகின்றனர்" என குற்றம் சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!