நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் - டி.டி.வி. தினகரன் முடிவு..!

நியூட்ரினோ துகள் ஆய்வுக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் டி.டி.வி தினகரன் இறங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

நியூட்ரினோ துகள் ஆய்வுக்கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் டி.டி.வி தினகரன் இறங்க இருப்பதாக, அவரது ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் மத்திய அரசு அமைக்க உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மதுரையிலிருந்து 10 நாள்கள் பிரசார நடைப்பயணத்தை மேற்கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது நடைப்பயணத்தை நிறைவுசெய்த வைகோ, கம்பத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்தச் சூழலில், தினகரன் தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்துக்கு அனுமதி கேட்டு, தங்க தமிழ்ச்செல்வன் இன்று (12-4-2018) மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து  நம்மிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ``பொட்டிபுரம் அருகே உள்ள அம்பரப்பர் மலையில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 4-ம் தேதி, டி.டி.வி தினகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

அதற்கான அனுமதி கேட்டு எஸ்.பி-யை சந்தித்தோம். அனுமதி தருவதாகக் கூறியிருக்கிறார். முதல் கட்டமாகக் கண்டன ஆர்ப்பாட்டமும், பிறகு, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்களும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார். முன்னதாக அம்பரப்பர் மலைப்பகுதிக்குத் தனது ஆதரவாளர்களுடன் சென்று தங்க தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!