`இரண்டு இடத்தில் வெடிகுண்டு வைக்க வேண்டும்' - திருப்பூர் காவல்துறைக்கு வந்த பகீர் அழைப்பு..!

திருப்பூர் மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்குச் சமீபத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய சுந்தரபாண்டியன் என்பவர்,  ``நான் காட்பாடியில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த சக்தி என்பவர், செல்போனில் யாரிடமோ, `இரண்டு இடத்தில் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ய வேண்டும்' எனப் பேசினார் என்று தெரிவித்திருக்கிறார். பின்னர் அவரை நேரில் அழைத்து விசாரித்த காவல்துறையிடம், தான் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் என்றும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன் என்றும் தெரிவித்தார். காட்பாடி அருகில் உள்ள தனது மனைவியின் ஊருக்குச் சென்றுவிட்டு, ரயிலில் திருப்பூர் நோக்கி வரும்போதுதான் இப்படியொரு சம்பவம் நடந்தது என்று கூறிவிட்டு, தன் அருகில் அமர்ந்து பயணித்த சக்தி என்பவரின் செல்போன் எண்ணையும் காவல்துறையிடம் கொடுத்திருக்கிறார் சுந்தரபாண்டியன்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் இறங்க, அதன்பிறகே சுந்தரபாண்டியனின் டுபாக்கூர் திட்டம் காவல்துறைக்கு தெரிய வந்திருக்கிறது. ``திருப்பூரில் வேலை செய்து வரும் சுந்தரபாண்டியன், வேலூர் மாவட்டம் ஒடுவத்தூரைச் சேர்ந்த வள்ளி என்பவரைக் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்திருக்கிறார். இத்தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ள நிலையில், சுந்தரபாண்டியனின் தீவிர குடிப்பழக்கத்தால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த ஒருவருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். வள்ளி தன் ஊரில் உள்ள சகோதரி தேவியின் வீட்டுக்குச் சென்று வசித்து வந்த நிலையில், சுந்தரபாண்டியன் பலமுறை நேரில்போய் அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் கோபமடைந்த சுந்தரபாண்டியன், தன் மனைவியின் சகோதரி தேவியின் கணவர் சத்யாவை பழிவாங்க முடிவு செய்திருக்கிறார். எனவே, அந்தப் பழிவாங்கும் முயற்சியாக ஒரு பொய்யான தகவலைக் காவல்துறையிடம் கூறி, அதில் சக்தியை மாட்டிவிடத் திட்டம் தீட்டியது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியது. 

திருப்பூர் காவல்துறையை ஏகத்துக்கும் கடுப்பேற்றிய சுந்தரபாண்டியன் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 177, 182 உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, தற்போது அவரைச் சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!