`ஸ்டெர்லைட்டை மூடும் வரை தொடர் போராட்டம்' - எச்சரிக்கும் அரசு ஊழியர்கள் சங்கம்!

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்,  உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை நடக்கும் என தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலிறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி புதுக்கோட்டை பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் ஒருநாள் கடை அடைப்பு  போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில் உள்ள 374 கடைகளும் அடைக்கப்பட்டன. இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய தூத்துக்குடி மாவட்ட மைய கவுன்சில் அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 800 லாரிகள் வரை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் வலுத்து வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!