Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``போனில் என் மனைவி கதறி அழுதாள்... எப்படி ஆறுதல் சொல்வேன்” - வைகோ உருக்கம்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர்  மகன் சரவண சுரேஷ் என்பவர், இன்று காலை விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

உடனே, அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து, அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். 90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்துள்ள அவரைக் காப்பாற்ற மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுவருகின்றனர். 

வைகோ உறவினர் தீக்குளிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தீக் குளித்ததாகச் சொல்லப்படுகிறது. வேறு ஏதும் காரணமா என்பது பற்றி காவல்துறை விசாரித்துவருகிறது.

வைகோ-வின் மனைவி ரேணுகா தேவியின் உடன் பிறந்த சகோதரர் ராமானுஜத்தின் மகன்தான், சரவண சுரேஷ்.

கோவில்பட்டியைச் சேர்ந்த ராமனுஜம், குடும்பத்துடன் விருதுநகர்  ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்துவருகிறார். வைகோ, அவ்வப்போது இங்கு வந்துசென்றிருக்கிறார். காவிரிப் பிரச்னையால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான நிலையில் உள்ளதால், மத்திய அரசுக்கு எதிராக வைகோ கடுமையாகப் பேசிவரும் நிலையில், சமீபத்தில் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகி ரவி தீக்குளித்து இறந்தார். இந்த நிலையில், வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம்குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, 

``என்னுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்களின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன், சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவன். தேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பான். பட்டதாரியான அவன், மிக அமைதியானவன். அனைவரையும் அன்போடு நேசிக்கும் உயர்ந்த பண்பாளன். என் துணைவியாரின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளிலேயே நான் மிக மிக நேசித்தது சரவண சுரேஷைத்தான்.

சரவண சுரேஷின் திருமணத்தை நான்தான் நடத்திவைத்தேன். அவனது மூத்த மகன் ஜெயசூர்யா, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறான். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.

கழக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் வந்து, எனது உறவினர் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக்கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தான். கடந்த சில நாள்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கு வந்தான்.

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறான். ஆசிரியையாகப் பணியாற்றும் அவனது துணைவியார் அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” என்று சொல்லி உள்ளான்.

இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து, ''நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்கிறார்கள். உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப்போல, எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்?

நேற்றிரவு, தி.மு.க செயல் தலைவர் சகோதரர் ஸ்டாலின் பங்கேற்ற கடலூர் பொதுக்கூட்டத்தில், “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காகத் தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேஷின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும்? என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு, 'யாரும் தீக்குளிக்காதீர்கள்' என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்’' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement