வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (13/04/2018)

கடைசி தொடர்பு:11:21 (13/04/2018)

`நான், கேர் ஆஃப் பிளாட்பாரம் அல்ல' - டி.எஸ்.பி-யிடம் கடுகடுத்த ஸ்டாலின்

ஸ்டாலின்

”நான், கேர் ஆஃப் பிளாட்பாரம் அல்ல” என்று கடலூரில் நடைபெற்ற காவிரி மீட்புப் பயணப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார்.

காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “காவிரி உரிமை மீட்புப் பயணத்தை 9 கட்சிகள் முடிவு செய்து, இரண்டு குழுக்களாகப் பிரிந்து திருச்சி, மற்றும் அரியலூரில் இருந்து பயணம் செய்து வருகிறோம். இந்தப் பயணத்தின் நோக்கம் காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமல் மோடி அரசு ஏமாற்றி வருகிறது. அதற்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் குதிரைபேர ஆட்சி துணையாக இருக்கிறது.

காவிரி உரிமை மீட்பு பயணம்

காவிரி மீட்புப் பயணம் செய்ய முடிவெடுத்தபோது, இந்தப் பிரச்னை குறித்து டெல்டா மாவட்ட மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்தார்கள். ஆனால் இந்த விஷயத்தில் எங்களைவிட பொதுமக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று இந்தப் பயணத்தில் நாங்கள் உணர்ந்தோம். மாநில ஆட்சியின் மீதும், மத்திய ஆட்சியின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. தமிழகத்தை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லவும் பாலைவனமாக்கவும் திட்டமிட்டே பாஜக அரசு செயலாற்றி வருகிறது. காவிரி பிரச்னையில் உண்மையிலேயே அக்கறை இருந்தால் நம் முதல்வர் மோடியைச் சென்று பார்த்திருக்க வேண்டும். அனைத்துக் கட்சியினர் சார்பில் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் மோடியை சந்திக்க நேரமே கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவிரி உரிமை மீட்பு பயணம் பொதுக்கூட்டம்

முதலில் இந்தப் பயணத்தை முடித்துவிட்டு காரில் பேரணியாகச் செல்லத்தான் முடிவெடுத்திருந்தோம். ஆனால் இத்தனை நாள்கள் அமைதியாக நடைபயணத்தை முடித்து விட்டு, கடைசி நாளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக அந்த முடிவைக் கைவிட்டோம். இதற்கிடையே காவல்துறை டி.எஸ்.பி ஒருவர் நடைபயணத்தைத் தொடரக் கூடாது என்று எனக்கு சம்மன் கொடுக்க வந்தார். அதற்கு, ‘நான் ஒன்றும் கேர் ஆப் பிளாட்பாரம் அல்ல. எனக்கென்று வீடு இருக்கிறது. அங்கு வந்து இந்த சம்மனைக் கொடு’ என்று சொன்னேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை எங்களின் இந்தப் போராட்டம் தொடரும். ஜவஹர்லாம் நேரு, இந்திரா போன்றவர்கள் பிரதமர்களாக இருந்த போது அவர்களுக்கும் நாங்கள் கறுப்புக் கொடியை காட்டியிருக்கிறோம். அதற்காக அவர்கள் மோடியைப் போல வான் வழியாகச் சென்றுவிடவில்லை. எங்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து இந்தியை திணிக்க மாட்டோம் என்று எங்களுக்கு வாக்களித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க