`ஜல்லிக்கட்டுப் போராட்டம்போல விரிவுபடுத்துவோம்!’ - எச்சரிக்கும் மாணவர்கள்! #BanSterlite

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

college students strike in thoothukudi

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், இந்த ஆலை அருகிலுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள், கடந்த 61 நாள்களாக கிராமத்தில் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சங்கரப்பேரி, மடத்தூர், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 8 கிராமங்கள் போராட்டத்தைத் தொடங்கி உள்ளன. இதுதவிர, வழக்கறிஞர்கள், சமூக அமைப்புகள், அரசு ஊழியர்கள் சங்கங்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கல்லூரி மாணவர்களும் 4 முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 5-வது முறையாக மீண்டும் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல மாணவர்கள் புறப்பட்டனர். அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பேருந்துகளில் மாணவர்கள் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேசினோம்,  “ ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, முதலில் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மட்டுமே போராடி வந்தனர். தற்போது, இந்த ஆலையைச்சுற்றி உள்ள 8 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களின் போராட்டங்கள் அதிகரித்து வருவதால்தான், தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்த ஆலையை இயக்குவதற்கான புதுப்பித்தல் மனுவை நிராகரித்துள்ளது. ஆனால், இது தற்காலிக செயல். மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான ஒரு முயற்சி. எனவே, இந்த ஆலைக்கு நிரந்தமாக உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்.

 ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய இரண்டும்தான் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரச்னைகள். இந்த இரண்டு பிரச்னைகளுக்காக, எதிர்கட்சிகள்தான் போராட்டம் நடத்திவருகிறதே தவிர, ஆளுங்கட்சியினர், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் என யாருமே நேரில் வந்து சந்திக்கவில்லை.இந்த அரசையும் ஆட்சியாளர்களையும்  வன்மையாகக் கண்டிக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்,  கல்லூரி மாணவர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம், மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தைப் போல விரிவுபடுத்தப்படும். ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!