`ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் அவர் இறந்திருப்பார்' - கிணற்றில் விழுந்தவரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் பேட்டி | Chennai Police saved the life of Protester

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (13/04/2018)

கடைசி தொடர்பு:11:48 (13/04/2018)

`ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் அவர் இறந்திருப்பார்' - கிணற்றில் விழுந்தவரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் பேட்டி

இன்ஸ்பெக்டர் ஜவஹர்

'ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் அவர் இறந்திருக்கக்கூடும்' என்று கிணற்றில் தவறி விழுந்தவரைக் காப்பாற்றிய  இன்ஸ்பெக்டர் ஜவஹர் தெரிவித்தார். 

 பிரதமர் நரேந்திரமோடிக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன. கிண்டி பகுதியில், பிரதமர் நரேந்திரமோடிக்கு கறுப்புக்கொடி காட்ட ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தரையையொட்டி அமைந்துள்ள கிணற்றில் போராட்டத்துக்கு வந்த ஒருவர் தவறி விழுந்துவிட்டார். இதனால், அங்கிருந்தவர்கள் அலற, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜவஹர், அங்கு ஓடிவந்தார்.

 கிணற்றில் விழுந்தவரைக் காப்பாற்ற தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கிணற்றில் விழுந்தவர் மயங்கிவிட்டார்.  அதைப் பார்த்ததும், அதிரடியாகக் கிணற்றுக்குள் இறங்கினார் இன்ஸ்பெக்டர் ஜவஹர். பாதுகாப்புப் பணிக்காகச் கொண்டுசெல்லப்பட்ட கயிறு மற்றும் நாற்காலியைக் கொண்டுவந்தனர். நாற்காலியைக் கயிறுமூலம் கிணற்றுக்குள் இறக்கினர். அதற்குள், கிணற்றுக்குள் இறங்கிய இன்ஸ்பெக்டர் ஜவஹர், நாற்காலியில் அந்த வாலிபரைத்  தூக்கி அமரவைத்தார். பிறகு, கிணற்றுக்கு மேலிருந்தவர்கள், நாற்காலியுடன் அந்த வாலிபரை மேலே தூக்கினர். அதற்குள், அங்கு தயாராக நின்ற 108 ஆம்புலன்ஸ்மூலம் அந்த வாலிபர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் ஜெயகுமார் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. கிணற்றில் அதிரடியாக இறங்கி வாலிபரை மீட்ட இன்ஸ்பெக்டர் ஜவஹருக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 இன்ஸ்பெக்டர் ஜவஹர்

வாழ்த்து தெரிவித்துவிட்டு, இன்ஸ்பெக்டர் ஜவஹரிடம் பேசினோம். "கிண்டி பகுதியில் நடந்த போராட்டத்துக்கு பாதுகாப்புப் பணிக்காக நேற்று சென்றிருந்தேன். அப்போது, போராட்டத்தில் பங்கேற்க வந்த ஒருவர், செல்போனில் பேசியபடி நடந்துசென்றபோது, தரையையொட்டி இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அதைப் பார்த்தவுடன் உடனே நான் கிணற்றுக்குள் இறங்கினேன். அதற்கு முன், கிணற்றை ஒருமுறை நோட்டமிட்டேன். அதிகபட்சம் 20 அடி வரை ஆழம் இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. மேலும், கிணற்றில் குறைவான தண்ணீரே இருந்தது. எனக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், தைரியமாக கிணற்றுக்குள் இறங்கினேன்.

பிறகு, வெளியில் இருந்தவர்களின் உதவியோடு அவரை மீட்டுவிட்டோம். ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் அவர் இறந்திருப்பார்.  ஏனெனில், கிணற்றில் விழுந்தவர், தண்ணீரை அதிக அளவில் குடித்ததோடு, மூச்சுத்திணறி மயங்கிவிட்டார். கிணற்றுக்குள் அவரைத் தூக்கி நாற்காலியில் அமர வைப்பது மட்டுமே என் குறிக்கோளாக இருந்தது. மற்றபடி எதையும் நான் கவனிக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் காலில் அடிப்பட்டுவிட்டது. வாலிபரைக் காப்பாற்றிய மனதிருப்பதியில், அந்தக் காயம் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை" என்றார். 

கிணற்றில் விழுந்தவரைக் காப்பாற்றி இன்ஸ்பெக்டர் ஜவஹருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. காவல் உயரதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் எனப் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.