வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (13/04/2018)

கடைசி தொடர்பு:12:34 (13/04/2018)

கேரள அரசு டாக்டர்களை அதிரவைக்கும் `ஆதர்ம்' திட்டம்! போராட்டத்தில் குதித்ததால் நோயாளிகள் அவதி

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களுக்கு போதிய அறிவிப்பு இல்லாமல் நடக்கும் இந்த ஸ்டிரைக் காரணமாக மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டதால், நோயாளிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

கேரளாவில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பொதுமக்களுக்குப் போதிய அறிவிப்பு இல்லாமல் நடக்கும் இந்தப் போராட்டம்  காரணமாக, மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டதால், நோயாளிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

டாக்டர்கள் ஸ்டிரைக்

கேரளாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் நடவடிக்கையாக, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, கடந்த 2016 நவம்பர் மாதம் ’ஆதர்ம்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியது. பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தத்தை உருவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, மருத்துவ சேவைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 

அதன்படி, அரசு மருத்துவமனைகளில் காலையில் மட்டும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டுவந்தது.அதேபோல மாலையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. குடும்ப சுகாதார மையம் எனப்படும் எஃப்.ஹெச்.சி மையத்திலும் மாலையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் சிகிச்சை நேரத்தை மட்டும் அதிகரிப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். 

இந்த நிலையில், பாலக்காடு மாவட்டம் குமாரம்புதூர் பகுதியில் உள்ள குடும்ப சிகிச்சை மையத்தில், மாலையில் மருத்துவ மையத்தில் இல்லாத ஜிஸ்மி என்ற மருத்துவர், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அரசு மருத்துவர்கள், இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டும் இயங்கும் என்றும், பிற சிகிச்சை எதுவும் அளிக்கப்பட மாட்டாது எனவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக, குடும்ப சுகாதார மையங்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன. அதனால், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தப் போராட்டம்குறித்து பொதுமக்களுக்கு போதுமான அறிவிப்பு வெளியிடப்படாததால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் நீண்ட நேரமாகக் காத்திருந்துவிட்டு வெளியே செல்லும் நிலைமை இருப்பதால், மருத்துவர்கள்மீது கடும் அதிருப்தி  ஏற்பட்டுள்ளது. 

மருத்துவர்களின் போராட்டம்குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா கூறுகையில், ’’கேரள அரசின் 'ஆதர்ம்' சுகாதாரத் திட்டத்தை முடக்கும் வகையில் மருத்துவர்கள் செயல்படுகிறார்கள். அதன் காரணமாகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டி  ருக்கிறார்கள். எங்கெல்லாம் மருத்துவ சேவையின் நேரத்தை அதிகப்படுத்தியிருக்கிறோமோ, அங்கெல்லாம் கூடுதலாக 3 மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையில் நியாயமில்லை. அதை ஏற்க முடியாது’’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.