Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.7 கோடியில் 242 தங்கக்கட்டிகள்... நடுக்கடலில் இலங்கைக் கடற்படை வீரர்களை அதிரவைத்த படகு!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தி வர முயன்ற சுமார் 7 கோடி மதிப்புள்ள தங்கத்தை,  கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு, இலங்கைக் கடற்படையினர் பறிமுதல்செய்துள்ளனர். இது தொடர்பாக தலைமன்னார் பகுதியைச் சேர்ந்ந 3 பேரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

படகு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே, கடல் வழியாகக் கஞ்சா, போதை மாத்திரைகள், வலிநிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், தங்கக்கட்டிகள் ஆகியன கள்ளத்தனமாக கடத்திச்செல்வது வாடிக்கையாகிவருகிறது. இந்திய கடல் பரப்பைக் கண்காணிப்பதற்காக இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை, சுங்கத்துறை, தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மற்றும் க்யூ பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் உள்ளன. இதேபோல, இலங்கைக் கடற்பகுதியில் கடற்படை, கடலோரக் காவல் படை எனப் பல பிரிவுகள் இயங்கிவருகின்றன.

இரு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புகளையும் மீறி, கடல் வழியாகக் கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. கடந்த 3 நாள்களுக்கு முன் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 146 கிலோ கஞ்சா பிடிபட்டது. அதே நாளில், இலங்கை பேசாலை பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட 2.6 கிலோ தங்கம், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல்செய்யப்பட்டது. 
இந்தப் பரபரப்பு ஓய்வதற்கு முன், மேலும் ஒரு கடத்தல் கும்பலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம், இலங்கை தலைமன்னார் பகுதியில் ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர், சந்தேகத்துக்கு இடமான நிலையில் வந்த பிளாஸ்டிக் படகு ஒன்றைப் பிடித்து சோதனையிட்டனர். அந்தச் சோதனையில், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 100 கிராம் எடைகொண்ட 242 தங்கக்கட்டிகள் சிக்கின. இவற்றின் இந்திய மதிப்பு, சுமார் 7 கோடி ஆகும். இதைத் தொடர்ந்து, படகில் வந்த தலைமன்னாரைச் சேர்ந்த 3 பேரைக் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 3 செல்போன் மற்றும் பிளாஸ்டிக் படகையும் பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், ராமேஸ்வரம் பகுதிக்கு கடத்திவரப்படும் நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் கடத்தல்காரர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய புலனாய்வுப் பிரிவுகளில் ஒன்றான க்யூ பிரிவு, ஒரே ஒரு தலைமைக் காவலரை மட்டும் கொண்டு இயங்கிவருகிறது. இதனால், கடல் வழியாக ஊடுருவும் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய முடியாமல் க்யூ பிரிவு திணறிவருகிறது. இதனால், கடத்தல் நடவடிக்கைகள் எந்தச் சிரமமும் இன்றி தொடர்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement